Wednesday, 28 September 2011

ஃபிகர் என்றவரை செருப்பால் அடித்த இளம்பெண்.


அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது.ஒரு பெண் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருக்கலாம்.ஒருவரை ஆக்ரோஷமாக செருப்பால் விளாசியதை கண்டு கூட்டம்கூடி விட்ட்து.பெண்ணின் உறவினர்கள் கூடி விட்டார்கள்.பேருந்தில் இடிப்பதிலிருந்து ஆண்களால் ஏற்பட்ட அத்தனை சங்கடங்களையும் சொல்லிக்காட்டி அழுது கொண்டிருந்தார்.
                                பக்கத்தில் இருந்த போலீஸ் வந்து விசாரித்த போது “ ஃபிகர் நல்லா இருக்குன்னு சொன்னேன் சார்அவ்வளவுதான் என்றான் அவன்.அவனுடைய நண்பனும் ஆமாம் சார் அது மட்டும்தான் சொன்னான் என்றான்.’’போய்  உன்னுடைய அம்மா,தங்கை என்று மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் அப்பெண்.இருவரையும் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு தெரியாது.
                                 வழக்கமாக இம்மாதிரி வார்த்தைகளை பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.மிகச்சிலர் தனக்கான அங்கீகாரமாக கூட கருதுவதுண்டு.இதற்குபோயா இப்படி என்று பலர் ஆச்சர்யப் பட்டார்கள்.மீண்டும் மீண்டும் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.காவல்துறையை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.அவருடைய உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
                                 இன்னொரு சம்பவம்.இரண்டு நண்பர்கள்.ஒருவர் கிட்ட்த்தட்ட அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவர்.அவரை குடிகாரா! என்று அழைப்பதில் இன்னொருவருக்கு சந்தோஷம்.குடிப்பவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சேர்ந்து கொண்டு சிரிப்பார்.பதிலுக்கு அவரை ஏதாவது விஷயத்தில் வாரி விடுவார்.ஒரு நாள் வழக்கமான பெட்டிக்கடையில் சந்திக்கும்போது குடிகாரன் வந்துட்டான் என்றார்.குடிக்கும் பழக்கம் உடையவர் அடிக்கப் பாய்ந்தார்.வார்த்தை தடித்து சண்டையாகி இருவரும் பேசிக்கொள்ளாத நிலை உருவாகிவிட்ட்து.
                                இளம்பெண் விஷயத்துக்கு வருவோம்.எத்தனையோ இடங்களில் ஆண்களின் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்ற பெண் திடீரென்று செருப்பைக்கழட்டியது ஏன்? பல நாட்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டாத குடிகாரன் என்ற வார்த்தை அன்று மட்டும் பிரச்சினை ஆனது எப்படி?
                                  செருப்பால் அடித்த பெண்ணின் அக்கா கணவர் விபத்தில் இறந்து பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருந்த்து.வீடும் உறவும் துக்கத்தில் கிடந்தபோது அக்காளின் குழந்தைக்கு ஒரு ஓரமாக உணவு கொடுத்துக்கொண்டிருந்தார்.ஏற்கனவே இருந்த மோசமான மனநிலை ஆத்திரத்தை தூண்டி விட்ட்து.எப்போதும் ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கத்துகிறார்.
                                  கணவன்,மனைவியோ உறவினர்களோ திடீரென்று சண்டை பிடிக்கும்போது கவனித்துப்பாருங்கள்.ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் நடந்து கொண்ட்தையும் சொல்லிக் கத்துவார்கள்.உறவுகளில் ஏற்படும் சிறு சிறு நெருடலும் உள்ளே தங்கியிருக்கிறது.மறைந்தோ,மறந்தோ போய்விடாது எத்தனை வருடங்களானாலும்!சமயம் வரும்போது வெளியே வந்து விடும்.
                                  சரி குடிகாரனுக்கு என்னதான் ஆனது? அதற்கு முந்தின நாள் இரவு முழுக்க மனைவியுடன் சண்டை.இவர் குடித்துவிட்டு வாந்தியெடுத்து வீட்டில் பிரச்சினை.அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் இவருடைய பழக்கம் தெரிந்து போனது.வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்தால் பரவாயில்லை என்று சொல்லி விட்டார்.பல நாட்கள் கிண்டலடித்திருந்தாலும் இப்போது அந்த வார்த்தை இரண்டு நண்பர்களை பிரித்து விட்ட்து.

சம்பவங்கள் சொல்லும் படிப்பினை என்ன? நான் சொல்வதைவிட மற்றவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment