Friday, 18 November 2011

வேலை செய்யும் இடமும் மன நலமும்

வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடம் நாம் வேலை பார்க்கும் இடம்தான்.சுவரை வைத்தே சித்திரம் என்பது போல வேலையை வைத்தே எல்லா நலமும். தொழில் செய்பவர்களை விடுத்து  அரசாங்கத்திலோ தனியார் நிறுவனத்திலோ பணியாற்றுகிறோம்.வேலைச் சூழல் வீட்டில் எதிரொலிக்கிறது.

அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அதி முக்கியமானவர்.நல்லவராக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.அவருடன் ஏற்படும் உரசல்களே பலருடைய மன நலத்தை குறி வைக்கிறது.


பெரும்பாலான அலுவலகங்களில் பொதுவான ஒரு விஷயம் அரசியல்.அரசியல் இருந்தால் கூடவே இருக்கும் குழுக்கள்.நான்கு பேர் வேலை செய்கிறவர்களாகவும்,நான்கு பேர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருப்பார்கள்."வேலை செய்கிறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு! என்று சொல்லப்பட்டது சுத்தமாக பொருந்தும்.

எமாற்றுகிறவனின் வேலையை அப்பாவி தலையில் கட்டுவார்கள்.சில நல்ல அதிகாரிகளும் இம்மாதிரி வேலையை செய்வதுண்டு.ஏமாற்ற நினைப்பவன் தலை வலிக்கிறது என்று உட்கார்ந்து கொள்வான்,இல்லாவிட்டால் வயிற்றை புரட்டுகிறது என்பான்.அப்புறம் வேலை நடக்காது! என்று காரணம் சொல்வார்கள்.


ஒழுங்காக இருப்பவர்களை குறை சொல்வதன் மூலம் தனது தவறை மறைக்கப் பார்ப்பார்கள்.இன்னொன்று ஏமாற்றுப் பேர்வழிகள் ,"டிபன் சாப்பிடுறீங்களா சார்?,காபி சாப்பிடுறீங்களா சார்? என்று அக்கறையாக இருப்பார்கள்.வீட்டில் மின் கட்டணம் கட்டுவது,குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற முக்கிய வேலைகளை தயங்காமல் செய்வார்கள்.அலுவலக வேலைதான் கஷ்டம்.போகட்டும்.

அலுவலக அரசியலில் சிக்காமல் புன்னகையுடன் வலம் வருபவர்களை பார்த்திருக்கிறேன்.பத்து மணி வேலைக்கு பத்து மணிக்கு சரியாக வந்து நிற்பார்கள்.அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை செய்வார்கள்.ஒய்வு கிடைத்தால் புத்தகம் படிப்பார்கள்.இல்லாவிட்டால் வீட்டுக்கு ,நண்பர்களுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தினமும் புத்துணர்வுடன் வேலைக்கு வருகிறார்கள்.பிரச்சினையான ஆட்களைப் பார்த்தால் பையன் நன்றாக படிக்கிறானா? மனைவிக்கு உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று கேட்டு நகர்ந்து விடுவார்கள்.ஒழுங்கமைந்த ஆளுமை(personality) இது .இப்படிப்பட்டவர்கள் மன நலத்தை யாராலும் கெடுத்துவிட முடியாது.


No comments:

Post a Comment