உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா? அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள்?அவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சினை? பெரும்பாலும் நம்முடைய எதிரிகள் யார் என்று கவனியுங்கள்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்,பங்காளிகள்,பக்கத்து வயலுக்கு உரிமையாளர்கள்,உடன் வேலை செய்பவர்கள்.இவர்கள் என்ன காரணத்திற்காக எதிரியானார்கள்?
”எங்கள் பையன் அவர்களுடைய பையனை விட நன்றாக படிக்கிறான் சார்!அந்த வயித்தெரிச்சலில் காரணமில்லாமல் எங்கள் மீது பகை சார்!” இப்படி பல இடங்களில் உண்டு.அற்ப காரணங்களுக்காக தம்மை விட வசதி வாய்ப்புகள்,வருமானம் அதிகம் என்று மனதில் எழும் உணர்வு வம்புக்கு இழுத்து பகையாக மாறுவதுண்டு.சில இடங்களில் நல்லது சொன்னால் கெட்டவனுக்கு எதிரியாக மாறுவது தவிர்க்கமுடியாது.
வரப்பு தகராறு என்று சொல்வார்கள்.பக்கத்து நிலத்துக்காரன் அருகில் உள்ள நிலத்தையும் கொஞ்சமாக சேர்த்து கட்டிக்கொள்வான்.காவல்துறை,நீதிமன்றம் என்று ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டிருப்பார்கள்.பணத்தை செலவு செய்து கடனாளியாகி மீள முடியாமல் போனவர்கள் உண்டு.பத்து ரூபாய் சொத்துக்காக பல ஆயிரம் செலவு செய்வார்கள்.
வன்முறை இல்லாத பகை சில நேரங்களில் நல்ல விளவுகளையும் தருகிறது. குடித்துவிட்டு வந்த மகனை பார்த்து தாய் கேட்கிறாள்,”எதிரிகளுக்கு முன்னால் நாம் சிறப்பாக வாழவேண்டாமா?” இந்த எண்ணம் மேலும் தன்னை சீர்படுத்தி வாழ்வில் முன்னேற ஒரு உந்துதலாக அமைவதுண்டு.
நிஜமான அன்பும் கூட சில நேரங்களில் பகையாக மாறுவதுண்டு.தவறான புரிதல்கள் காரணமாக பிரிந்து விடுவார்கள்.எப்போது மீண்டும் இணைவோம் என்ற உள்ளப்போக்கே இருபக்கமும் இருந்து கொண்டிருக்கும்.ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.துக்கம்,மகிழ்ச்சி ஏதேனும் ஒரு நிகழ்வில் ஒன்றிணைவார்கள்.
மறைமுகமான எதிரிகளைவிட ஆபத்தானவர்கள் இருக்க முடியாது.பலர் அந்த அதிர்ச்சியை சந்தித்து இருப்பார்கள்.எவ்வளவு நம்பினோம்.தாய் பிள்ளையாய் பழகினோமே என்று தோன்றும்.ஆனால் மனிதர்கள் அப்படியும் இருக்கவே செய்கிறார்கள்.போட்டுக்கொடுப்பது,நம்மைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டு மறைமுகமாக அனானியாக புகார் செய்வது என்று இருப்பார்கள்.
தங்கள் சுயநலத்திற்காக கீழ்த்தரமான தந்திரங்களை தொடர்ந்து கையாண்டு வருவார்கள்.ஒரு நாள் அவர்களைப்பற்றி உண்மை தெரிய வரும்.நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.ஆனால் வெகுகாலம் நல்லவர்களாகவே நடிக்க முடிவதில்லை.சாயம் வெளுத்து விட்ட பின்னால் வேறு ஏதாவது கதையை திசை திருப்புவார்கள்.
பகையையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்பவர்கள் உண்டு.மனம் முழுக்க அந்த உணர்வுகளே எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.பகைவர்கள் வாழும்போது வயிறு எரிவதும்,வீழும்போது கை கொட்டி சிரிப்பதும் நடக்கும்.அமிலத்தை நெஞ்சில் வைத்திருப்பது மாதிரித்தான் ஆகிவிடுகிறது.
நாம் சரியாக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சரியாக இருப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் பகை நம்முடைய மனத்தை கெடுக்காத அளவுக்கு செயல்படுவது நம் கையில் இருக்கிறது.நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.
உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
Reviewed by haru
on
December 15, 2011
Rating:
No comments