Friday, 6 January 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?


போபியா(phobia)என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.
                               வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
                               சிலருக்கு இந்த பிரச்சினை விலகுவதேயில்லை.இம்மாதிரி உள்ள பெரும்பாலானோருக்கு வேறு சில மனநல பாதிப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.பள்ளி,கல்லூரிகளில் விஷயம் தெரிந்த ஆசிரியர் அமைந்தால் இத்தகைய மாணவர்களுக்கு ஓரளவு உதவ முடியும்.கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம்,உணர்வு ரீதியாக உதவி செய்து இக்குறையை போக்க முயற்சி செய்வார்.
                               சுற்றி உள்ளவ்ர்கள் புரிந்து கொண்டால் உதவ முடியும்.இது அவருக்கு நல்ல அறிகுறி அல்ல! மேலும் மனம் சார்ந்த பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது,டென்ஷன்,கவலை,பாதுகாப்பில்லாமல் உணர்வது,நடுக்கம்,முடிவெடுப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகளை இவர்களிடம் பார்க்க முடியும்.
                                 மனம் சீரற்று இருப்பதால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.எளிதில் சோர்வடைதல்,நாடித்துடிப்பு அதிகரிப்பது,உடலில் சில இடங்களில் வலி,முழுமையானகவனமின்றி இருப்பது,ரத்த அழுத்தம் கூடுவது,நினைவாற்றல் குறைவு ஆகிய உடல் நல பாதிப்புகளும்ம் இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவான விஷயங்கள்.வயதிற்கேற்ப,ஒவ்வொருவருடைய சூழல் பொறுத்து அறிகுறிகளில் மாற்றம் இருக்கலாம்.
                                  இப்படி நாலு பேர் முன்னால் முகத்தை காட்ட அஞ்சுவதை சோஷியல் போபியா(social phobia)என்பார்கள்.கேலி ,கிண்டல் போன்றவை இவர்களுக்கு பெரும் சங்கட்த்தை உருவாக்கும்.அதிக கஷ்டமாக உணர்வார்கள்.நண்பர்கள் மேலும் இதை சிக்கலாக்குவதால் இன்னும் ஒதுங்கியே போவார்கள்.சிலருக்கு இது தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கும்.
                                  இப்பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இவற்றை எதிர்கொள்வது எப்படி? குடும்ப உறுப்பினர்களாக,நண்பர்களாக நாம் எப்படி உதவ முடியும்? இன்னுமொரு பதிவில் அலசுவோம்.

No comments:

Post a Comment