லஞ்சமா? மேல் வருமானமா?
லஞ்சம் குற்றச்செயலாகவோ,தண்டனை தரத்தக்கதாகவோ சமூகம் கருதுவதாக தெரியவில்லை.உறவினரோ ,நண்பர்களோ அரசு வேலையில் இருந்தால் " மேல் வருமானம் ஏதாவது கிடைக்கிறதா?'' என்றுதான் கேட்கிறார்கள்.ஆனால் மனசுக்குள் என்னநினைப்பார்களோ?.ஒருவரது வருமானத்தை மதிப்பிடுவதில் சுற்றி உள்ள அத்தனை பேருக்கும் அக்கறை.சம்பளத்தை கேட்ட பிறகு மேல்வருமானமும் கேட்பார்கள்.பணம் மதிப்பைக் கொண்டு வருகிறது.எப்படி சம்பாதித்தால் என்ன ?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2 நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி."ஏன் எல்லோரும் சார் பதிவாளர் பணிக்கே முன்னுரிமை தருகிறார்கள்? ". ரொம்பவும் சிந்திக்கவும் சங்கடப்படவும் வைத்த கேள்வி அது.குரூப் -2 தேர்வில் நிறைய பதவிகள் உண்டு.அவற்றில் சார் பதிவாளர் பதவியும் இருக்கிறது.நகராட்சி ஆணையாளர் பணிக்கு சார் பதிவாளரை விட சம்பளம் அதிகம்.ஆனால் பெரும்பான்மையாக (அப்படி வைத்துக்கொள்வோம்) சார் பதிவாளர் பணிக்கு முன்னுரிமை தந்து விண்ணப்பிப்பார்கள்.இப்போது உங்களுக்கு காரணம் தெளிவாகவே புரிந்திருக்கும்.எனக்கு ஆச்சர்யமாக இல்லை.
தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாரிப்பவர்களை எனக்குத்தெரியும்.கடையில் விற்கும் ஏதோவொரு புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு தேர்வுக்குப்போவது ஒரு வகை.நூலகம் அல்லது பயிற்சிக்கு சென்று தயாரிப்பவர்கள் இன்னொரு வகை.இவர்களில் பலரை எனக்கு தெரியும்.கிராமத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள்.வீடு திரும்ப இரவாகும்.தேடித்தேடி படிப்பார்கள்.எந்த நேரமும் படிப்பைத் தவிர வேறு சிந்தனை இல்லை.
அரசாங்க உத்தியோகம் என்றால் பிரச்சினை இல்லை.வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளலாம்.வேலை செய்யாவிட்டாலும்,தூங்கி விட்டு போனால்கூட சம்பளம் கொடுப்பார்கள்.யாரும் அசைக்க முடியாது.கேள்வி கேட்க முடியாது.அவர்களுக்கு அரசு வேலை முக்கியமான கனவு.ஆனால் பெரும்பாலானவர்களிடம் வேறொரு கனவும் இருக்கிறது என்பதை நான் அறிவேன்.அந்தக் கனவுதான் சார் பதிவாளர் பதவிக்கு முன்னுரிமை தரச்சொல்கிறது.சமூக அக்கறை உள்ளவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.
ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யப் போகிற அதிகாரிகள் இவர்கள்தான்.சில ஆண்டுகளில் உயர் அதிகாரிகளாகவும் நியமனம் பெறுவார்கள்.மனித நேயமற்ற சுயநல நடவடிக்கைகளால் இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.பொருந்தாத உத்தரவுகளால் நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.தேச விரோதம் தவிர வேறில்லை.இவர்களும் இந்தியக் குடிமக்கள்தான்.சிலர் ஏழைகளும் கூட!
லஞ்சத்தை தூண்டுவது யார்? இந்திய ஆட்சிப்பணி முதல் இளநிலை உதவியாளர் வரை போட்டித்தேர்வு இருக்கிறது.கடுமையாக படிப்பார்கள்.நாட்டு நடப்பு அத்தனையும் தேடித்தேடி படிப்பார்கள்.பணிக்கு வந்த பிறகு சுத்தமாக படிப்பை மறந்து விடுவார்கள்.நாளிதழ் படிக்கக் கூட நேரமில்லை என்பார்கள்.இந்தியாவில் படிப்பு வேலைக்காக மட்டும்தானே இருக்கிறது? துவக்கத்தில் பேசிய விஷயத்துக்கு வருவோம்.சமூகம் பணத்தை வைத்தே ஒருவனை மதிப்பிடுகிறது.அவன் லஞ்சம் வாங்கி அதிக பணம் வைத்திருந்தால் மரியாதை கிடைக்கும்.
அலுவலக சூழலில் லஞ்சம் வாங்காதவன் தனிமைப்படுத்தப்படுகிறான்.அவன் சமூகத்திற்கு எதிராக இருக்கிறான்.ஏளனம்,அவ மரியாதை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.அரசியல்வாதிகளின் பொல்லாப்புக்கு ஆளாகவேண்டும்.எப்போதும் மாற்றத்தை எதிர்நோக்க வேண்டும்.லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்தி இவை பேசப்படவில்லை.பிரச்சினையின் வேரை புரிந்து கொண்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க முடியும்.கல்விமுறை,மக்களிடம் விழிப்புணர்வு ,மதிப்பீடுகளில் மாற்றம் போன்றவை கவனத்தில் கொள்ள வேண்டியவை.
நண்பர்களுக்கு ,
லஞ்சமா? மேல் வருமானமா?
Reviewed by haru
on
July 14, 2012
Rating:
No comments