கண் பட்டுவிடும் என்பது உண்மையா?
கண்ணுப்பட போகுதைய்யா சின்னக்கவுண்டரே என்று ஏன் பாட வேண்டும்.கண் பட்டு விடும் என்ற நம்பிக்கை உண்மையா? சுத்திப்போட வேணுமாம்.அப்படி என்னத்தை சுத்திப்போடுவார்கள்? கோயிலில் தலையை சுற்றி தேங்காய் உடைப்பார்கள்.கண் திருஷ்டி கழிந்து விடும் என்பது நம்பிக்கை.
குழந்தைகளுக்கு கிராமங்களில் அடிக்கடி சுற்றிப்போடுவது வழக்கம்.பெரும்பாலும் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்வார்கள்.மூன்று வீடுகளிலிருந்து கூரையில் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து வருவார்கள்.(இப்போது புல்லால் ஆன கூரைகள் எங்கே இருக்கிறது?).அப்புறம் மிளகாய்,உப்பு எல்லாமும் சேர்த்து திருஷ்டி கழிக்கவேண்டியவரின் தலையை சுற்றுவார்கள்.அடுப்பில் போட்டால் வெடித்துச்சிதறும்.கண் திருஷ்டி கழிந்து விட்ட்து.இதற்கு அர்த்தம் தெரியவில்லை.
இதென்ன மூட நம்பிக்கை என்று தோன்றும்.இன்றும் புதுவீடு கட்டினால் பூசணிக்காய்க்கு படம் வரைந்து வீட்டு முன்னால் தொங்க விட்டுவிடுகிறார்கள்.குழந்தைகளை குழிப்பாட்டிய உடன் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.பெரும்பாலும் கண்ணுக்கு வைக்கப்படும் மை இது.புது மண தம்பதிகளுக்கு இப்படி சுற்றிப்போடும் வழக்கம் உண்டு.
முன்னோர்கள் ஏற்படுத்திய பலவும் அர்த்தமுள்ளவை.கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மத்த்தில் இதுபற்றி பல விஷயங்களை சொல்லியிருப்பார்.கண் பட்டுவிடும் என்ற நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது பொறாமைதான்.மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் உணர்வு அது.பார்ப்பதற்கு மிக அழகானதும்,புது வீடு போன்ற வளமையை காட்டும் விஷயங்களும் மற்றவர்களின் பொறாமையை தூண்டக்கூடியது.
குழந்தைகளை விட அழகை எங்கே காண முடியும்? பார்ப்பவர்களுக்கு அழகு பொறாமையைத் தூண்டும் என்பதால் கருப்பு மையை கன்னத்தில் வைத்து விடுகிறார்கள்.அந்த மை முழு அழகையும் மறைத்துவிடும் என்பதால்தான்.புது வீட்டுக்கு முன்பு திருஷ்டி படம் வைப்பதும் அப்படியே!புது வீடு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பும் வாய்ப்பு உண்டு.
இத்தகைய வயிற்றெரிச்சலால் என்ன பாதிப்பு வந்து விடப்போகிறது? பாதிப்பு வரும் என்பதால்தான் இந்த ஏற்பாடுகளை செய்கிறார்கள்.சுற்றி உள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் இந்த உணர்வு அவர்களை நேசிக்க விடாமல் செய்கிறது.சமயத்தில் சிறு உதவி கூட கிடைக்காது.இன்னொருவரை செய்ய விடாமலும் தூண்டும்.
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இத்தகைய பொறாமை வளர்ந்துவிட்டால் அவர்களுடைய ஒத்துழைப்பை இழக்கநேரும்.தனிமைப் படுத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு.சிலர் சரியாக பேசக்கூட மாட்டார்கள்.இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு நோய்களுக்கும் ஆளாகலாம்.உறவுகளின் இயல்பு நிலை உடையும்.இதையெல்லாம் தவிர்க்கலாம் என்ற எண்ணம்தான் இந்த நம்பிக்கைகளுக்கு அடிப்படை.
கண் பட்டுவிடும் என்பது உண்மையா?
Reviewed by haru
on
September 12, 2011
Rating:
No comments