பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.
பொதுமக்கள் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள் தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத பிரச்சினை சில்லறை பிரச்சினை.
ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை’’ மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்”.சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை இல்லை!”
50 பைசா சில்லறை தராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு.அடி வாங்கிய,சண்டையை சந்தித்த நட்த்துனர்களும் உண்டு.ஆனால் எல்லோருக்கும் வழக்கு தொடுக்கவும்,சண்டை பிடிக்கவும் நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.
நானும் நண்பரும் வெளியூர் பயணத்திற்காக பேருந்து நிலையத்தில் இருந்தோம்.புத்தகம் வாங்கச்சென்று திரும்பினால் நண்பர் வயதான் ஒருவருக்கு பணம் தருவதை பார்த்தேன்.பாட்டி பணம் வாங்கிக் கொண்டு கும்பிடுவிட்டு சென்றார்.பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.விசாரித்த பிறகு தெரியவந்த விஷயம்.
பாட்டிக்குநான்கு ரூபாய் சில்லறை தரவேண்டும். கண்டக்டர்,சில்லறை இல்லை பேருந்துநிலையத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.பேருந்து நின்ற பிறகு இறங்கிப் பார்த்தால் கண்டக்டர் ஆளையே காணோம்.நகரப்பேருந்து பிடித்து கிராமத்துக்குப் போக வேண்டும்.இரண்டு ரூபாய் குறைவாக இருக்கிறது.காத்திருந்து பார்த்துவிட்டு யாரையாவது கேட்கலாம் என்று கேட்டு விட்டார்.
எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.திருப்பத்தூர் சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.நூறு ரூபாய்க்கு மீதி சில்லறை பஸ் ஸ்டாண்டில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார் கண்டக்டர்.இறங்கிப்பார்த்தால் மனிதர் கிடைக்கவில்லை.இறங்கியவுடன் சாப்பிடப் போய்விட்டு அரைமணி கழித்து வந்தார்.கடைசி பஸ்ஸை தவற விட்டுவிட்டேன்.
நாங்கள் மட்டும் சில்லறைக்கு எங்கே போவோம் என்று கேட்கிறார்கள்.பயணம் செய்யும் அத்தனை பயணிகளும் எப்போதும் சரியான சில்லறையுடன் செல்ல வேண்டுமா? சாத்தியமான ஒன்றா? புதியதாக ஒரு ஊருக்குப் போகும்போது எவ்வளவு கட்டணம் என்று கேட்டுவிட்டு சில்லறை மாற்றி ஏற முடியுமா? சில இடங்களுக்கு ஒரு மணி,அரைமணி நேர இடைவெளியில்தான் பஸ் இருக்கும்.அவசரத்தில் கடைக்கு ஓடி சில்லறை வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டம்.
கண்டக்டர் தனி நபர் அல்ல.அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.அரசு வங்கியில் இருந்து பெற்று இவர்களுக்கு சிலநூறு ரூபாய்களுக்கான சில்லறையை வழங்க முடியும்.பேருந்து நிலையத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவே வழங்கலாம்.தவிர அரசுப் பேருந்து என்பது அதிக மக்கள் பயன்படுத்தும் விஷயம்.மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.
Reviewed by haru
on
November 20, 2011
Rating:
Reviewed by haru
on
November 20, 2011
Rating:





No comments