நம்மை உணரும் தருணங்கள்.
புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது சிலர் உணர்ச்சிவசப் படுகிறார்கள்.சினிமா பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காட்சியில் அழுகிறார்கள்.ஆனால் படம் பார்க்கும் அத்தனை பேரும் அழுவதில்லை.நாவல் படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள்.கலை,இலக்கியமெல்லாம் எல்லோரிடமும் ஒரே பாதிப்பை ஏற்படுத்துமா?
தோப்பில் முஹம்மது மீரானின் கடலோர கிராமத்தின் கதை நாவலை பலர் படித்திருப்பார்கள்.வெளியாகி அதிக விற்பனையான நாவல் என்று பேசிக்கொண்டார்கள்.ஒரு இரண்டாயிரம் இருக்குமா? தமிழ் எழுத்தாளன் நிலை அப்படித்தான்.கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து கொண்டிருந்தேன்.50 வயதைக்கடந்த ஒருவர் பேச்சுக் கொடுத்தார்.
எனக்கு தெரிந்தவர்தான்.கொஞ்சம் தனிமையில் சுற்றிக்கொண்டிருந்தார். ”என்ன புத்தகம்?” என்று கையை நீட்டினார்.” நான் படித்துவிட்டு தருகிறேன்” என்று கேட்டார்.நான் படித்த பின்பு தருவதாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.சில தின்ங்களில் அவரைப் பார்த்து கொடுத்து விட்டேன்.
அடுத்த நாளே தேடி வந்தவர் “புத்தகம் நேற்றே படித்துவிட்டேன்,கடைசியில் நான் அழுதுவிட்டேன்.’’ என்றார்.எனக்கு சங்கடமாக இருந்த்து.நாவலின் வெற்றி அது.ஆனால் எனக்கு அழுகை வரவில்லை.ஆனால் சந்தோஷமெல்லாம் இல்லை.என்னவொரு ஆர்ப்பாட்டம்,கொடுங்கோன்மை.அனுபவிக்கட்டும் என்றுதானே தோன்றவேண்டும்? ஏன் அழுகை வருகிறது?
அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.கஷ்ட்த்தில் இருந்தார்.வெளியே தலைகாட்டவே ஒரு மாதிரியாக இருக்க வேண்டும்.ஆமாம் வாழ்ந்து கெட்டவர்.நாவலை படித்து அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி அவருடைய சமகால வாழ்வை பிரதிபலிக்கிறது.
இன்னொரு நிகழ்வு.பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.உடனிருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்.தன்னுடன் பணிபுரிவதாகவும் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதாகவும் சொன்னார்.இருவரும் இறுக்கமான மனநிலையில் இருந்தார்கள்.நானும் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.நண்பர் ஒரு பாடலை முணுமுணுத்தார்,கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
கனத்த மனத்துடன் கிளம்பிப் போவதாக பட்ட்து.என்னுடைய நண்பர் சொன்னார்,” அவருக்கு இங்கேயே இருக்க விருப்பம்தான்.வேலை செய்யுமிட்த்தில் தேவையில்லாத பிரச்சினைகள்.அவராக மாற்றல் வாங்கிப் போகிறார்.மனசே சரியில்லை.எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்”. எனக்கு கருப்பு நிலா பாடலை முணுமுணுத்த அர்த்தம் புரிந்துவிட்ட்து.விடைபெற்றுச் சென்றவர் கருப்பு நிறத்தில் இருந்தார்.
உன்னால் முடியும் தம்பி படம் பார்த்துக்கொண்டிருந்தோம்.கமல் வீட்டை விட்டு கிளம்புகிறார்.உடன் வந்த நண்பன் கண்ணை துடைத்துக் கொண்டான்.எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.பிறகு தெரிந்து கொண்ட விஷயம்,அவர் வீட்டில் காலையில் சண்டை.வீட்டில் இருக்கவேண்டாம் எங்காவது போய்த்தொலை என்று அவனுடைய அப்பா திட்டியிருந்தார்.
சில சூழல்களில் நாம் முணுமுணுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.புத்தகத்தில் திரைப்பட்த்தில் ஒரு காட்சி ஏற்படுத்தும் உணர்ச்சி நமது வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மை உணர்ந்து கொள்ள இவற்றிலும் சாத்தியம்தான்.
நம்மை உணரும் தருணங்கள்.
Reviewed by haru
on
December 26, 2011
Rating:
Reviewed by haru
on
December 26, 2011
Rating:





No comments