உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?!

Ads Below The Title

                              உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                              மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல்  உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி செய்கிறேன்,ஆனால் தொப்பை அப்படி ஒன்றும் குறையவில்லை என்பார்கள்.
                               உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள்.எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்று படித்தேன்.உண்மையென்றுதான் தோன்றுகிறது.உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.
                                தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள் என்றார் ஜிம் வைத்திருக்கும் ஒரு நண்பர்.இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.
                                 வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள்.பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது.உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் நாக்குக்கு அடிமையானவர்களே அதிகம்.
                                                                             சில உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த் தூண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு இந்த பண்பு உண்டு.இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகள் தொப்பையை வளர்க்கின்றன்.முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்ட்து போல அரிசி உணவுகளை அதிகம் உண்கிறோம்.நமது மதிய உணவுக்கும் தொப்பைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
                                  காய்கறிகள்,பழங்கள் போன்றவை திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவதில்லை.மிதமான அளவு உண்போம்.வயிறும் நிறைந்திருக்கும்.உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.
                                  உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?! உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?! Reviewed by haru on December 29, 2011 Rating: 5

No comments