காதலும் காமமும்
காதல்,இளமை உணர்ச்சிகள் என்பவை நாம் அவ்வளவாக கவனம் செலுத்தாத விஷயங்கள்.இருண்ட பக்கமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இளமை ஒரு முக்கியமான காலகட்டம்.வாழ்வின் அடித்தளமாக,திசைமாற்றும் புயலாக,வேகம்,மூர்க்கம் என்று விதவிதமாக விரியும் பொழுது.ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை.சங்கடமான விஷயங்களை சிந்திக்க மறுக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய மகன்களோ,மகள்களோ அப்படி இல்லை என்று மனம் தப்பித்துக்கொள்ள விரும்புகிறதா? பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காதல் போட்டியில் கொலை செய்கிறார்கள்.காதலை ஏற்றுக்கொள்ளாத மாணவியை கார் ஏற்றி கொல்கிறார்கள்.ஒன்பதாம் வகுப்பு மாணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காரணம் என்னவென்று அவரது பெற்றோர்களுக்கு தெரியாது.என் தற்கொலைக்கு நானே காரணம் என்று கடிதம் மட்டும் இருக்கிறது.இறுதிவரை என்ன காரணம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.கேலி,கிண்டல் செய்தால் கூட உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
உலகமே நம்மை மதித்து போற்றவேண்டுமென்று அதிகமாக நினைக்கும் வயது.தான் அழகில்லை,வசதியில்லை என்று மன அழுத்த்த்தில் இருக்கும்போது கேலி செய்தால் செத்துப்போக முடிவெடுத்து விடுகிறார்கள்.நாட்டின் மக்கள் தொகையில் அதிகம் உள்ள இளைஞர்கள் மனக்குழப்பத்தில் தவிக்கிறார்கள். அரசாங்கமோ,பெரிய மனிதர்களோ கவலைப்படவேயில்லை.இதெல்லாம் ஹார்மோன் பிரச்சினை.சிந்திக்க ஒன்றுமில்லை என்று கருதக்கூடும்.
அவர்களைத்திட்டுகிறோம்,சபிக்கிறோம்.சீரழிவதாக குற்றம் சாட்டுகிறோம்.சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்கிறோம்.நண்பர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று நம்புகிறோம்.அவர்கள் சரியில்லை.அவ்வளவுதான்.நம் வேலை முடிந்துவிட்ட்து.அவர்களுக்கு கடுமையாக தண்டனை தரவேண்டும்.
நாளிதழ்களில் வரும் செய்திகள் குறைவென்று எனக்குத் தோன்றுகிறது.பல வக்கிரங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன.தற்கொலைகள் குடும்ப மானம் கருதி திசை திருப்பி நோயால் ஏற்பட்ட மரணமாகின்றன.போதைக்கு அடிமையாவது,இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதென்று வெளித்தெரியாத விஷயங்களே அதிகம்.
ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறோமா? எனக்கு ஆத்திரமாக இருக்கிறது,தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது,கொல்ல வேண்டும் என்று எண்ணம் வருகிறது,துக்கமாக இருக்கிறது என்று அவர்கள் யாரிடம் சொல்வார்கள்.
காதல்,காம்ம் உள்ளிட்ட பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறி ஆலோசனை பெறமுடியுமா? நண்பர்களிடம் சொன்னால் உரிய வழிகாட்டும் திறன் படைத்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்காக ஒரு வழி காண முடியாதா? உலகத்தை கவனித்தால் வழி இல்லாமல் இல்லை.
சீனாவில் கல்லூரிகளில் காதலும் காம்மும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்லி ஆலோசனை பெற முடியும்.துக்கம்,ஆத்திரம்,கோபம் போன்ற உணர்ச்சிகளை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.இப்போதாவது சிந்திக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
காதலும் காமமும்
Reviewed by haru
on
December 08, 2011
Rating:
Reviewed by haru
on
December 08, 2011
Rating:





No comments