தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?
குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.” நம்மை மதிக்கவேண்டுமே?’’ என்ற சொற்களை யாராவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.தம்பதிகளில் யாராவது ஒருவர்தான் கவலையுடன் சொன்னார்கள்.தெரிந்த நண்பர் ஒருவரை வழியில் சந்தித்தேன்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.” என்னுடைய மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிடும்,எனக்குத்தான் பிரச்சினை! என்னை மதிக்கவேண்டுமே?” என்றார்.இன்னொருவர் பெண்.திட்டப்பணி ஒன்றில் அவருக்கு பணி.வேலை நீடித்திருக்குமா என்ற கவலையில் இருந்தார்.” என் கணவர் என்னை மதிக்கவேண்டுமே?” என்றார்.
கணவனும் மனைவியும் இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதுதான் நம்முடைய குடும்பங்களின் பிரச்சினையா? “பிறந்த வீட்டின் பெருமையை கூடப்பிறந்தவனிடம் சொன்ன கதையாக” எனக்குத்தோன்றுகிறது.வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது திருத்தமாக உடை அணிகிறோம்.அழகு படுத்திக்கொள்கிறோம்.வீட்டுக்கு வந்து விட்டால் நமக்கு லுங்கி பனியன் போதும்.வெளியில் நாலுபேர் நம்மை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.வீட்டிலும் அதே எண்ணம் இருப்பது சிக்கலை கொண்டுவருகிறது.வீட்டிலுள்ளவர்களுக்கு நம்முடைய பலம்,பலவீனம் தெரியுமே? ஆனாலும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.
மரியாதை வேண்டும் என்றவுடன் மனம் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.பொய் சொல்வதில் துவங்கி தன்னை உயர்த்திக்கொள்ள ஆயிரம் வழிகளைத் தேடுகிறது.யார் பெரியவர் என்பதற்கான சண்டைகள் ஆரம்பித்து விடுகிறது.யாராவது ஒருவர் சறுக்கும்போது,வேலை இழப்பு அல்லது வேலை கிடைத்தல் போன்ற நிகழ்வுகள் இன்னொருவர் மனதில் பாதிப்பை உருவாக்குகிறது.” நமக்கு மரியாதை போய்விடுமே என்ற கலக்கம் தோன்றி இயல்பு நிலை கெடுகிறது.முடிவு என்னவாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த கதை.
மனதளவில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இல்லை என்பது தெளிவு.சங்கடமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு என்பது முக்கியமான விஷயம்.ஆனால் பல குடும்பங்களில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. நம்மை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தை சிதறடிக்கிறது.கணவனோ,மனைவியோ கொண்டுவரும் பணம் மட்டும் முக்கியமாகி கிடைக்காது என்றால் மரியாதை போய்விடுகிறது.மனைவி உளரீதியான ஆதரவுக்காக பிறந்த வீட்டை நம்பி இருக்கவேண்டிய நிலை.ஆணுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.
எப்போதும் இருவரும் கலக்கமாகவே இருக்கிறார்கள்.தன்னுடைய மதிப்பு சரிந்துவிடகூடாது என்பதில் அதிக கவனம் இருக்கிறது.மனைவி அதிகம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் மனசு கெட்டுப்போகிறது.சிலர் வெளியே காட்டிக்கொள்ளாமல் உரிய மரியாதை கொடுத்து கடந்து விடுகிறார்கள்.ஆனால் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கும்.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்னது இது, ”திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரில் ஒருவர் தகுதி நிலையில் தாழ்ந்து இருக்க வேண்டும்.”
கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில் அன்புக்கும் ஆதரவுக்கும் இடமே இல்லை.குடும்பம் பட்ட மரத்தின் கீழ் இருக்கிறது.மரியாதையை எதிர்பார்க்கும் இடம் பாதுகாப்பான இடமல்ல! கிடைக்காமல் போனால் வலி அதிகமாக இருக்கும்.மரியாதை கிடைப்பதற்காக தந்திரங்களை கைக்கொள்ள வேண்டி வரும்.புறச்சூழலில் ஏற்படும் மன காயங்களுக்கு மருந்திடும் இடமாக வீடு இருக்க வேண்டும்.ஆனால் பலர் மரியாதையை எதிர்பார்த்து தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே காலத்தை கட்த்தி விடுகிறார்கள்.இங்கே நேசிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?
Reviewed by haru
on
October 24, 2012
Rating:
Reviewed by haru
on
October 24, 2012
Rating:





No comments