ஆரோக்கியம் காத்த நிலக்கடலை
பலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும்.தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான்.தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய்,தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய்.வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை.நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும்.அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு.
செக்குவைத்து எண்ணெய் எடுத்துத்தர ஒரு சாதி உண்டு.பெரும்பாலும் கிராமத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெய்தான்.என்னுடைய சிறுவயதிலேயே செக்கெல்லாம் காணாமல் போய்விட்டது.அப்புறம் எந்திரம் வந்துவிட்டது.பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தபோது கடலைஎண்ணெய் தவிர மற்றவை பிரபலமாக இருந்தது.அது ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
தோலை நீக்காமல் சாப்பிடுங்கள்
தர்மபுரி பகுதியில் கடலைக்காய் என்று சொல்வோம்.பாதையோரம் நிலம் இருந்தால் காவல் இருந்தேதீரவேண்டும்.வழியில் போகும்போது செடியைப்பிடுங்கி விடுவார்கள்.நிலக்கடலை விளைச்சல்தான் அந்த ஆண்டின் வளத்தைத் தீர்மானிக்கும்.மூட்டையை அடுக்கிவைத்துக்கொண்டு விலையைக்கவனித்துக் கொண்டிருப்பார்கள்.செடியைப்பிடுங்கி எத்தனை காய் இருக்கிறதென்று பார்த்தே ஓரளவு தீர்மானித்து விடுவார்கள்.
கடலையை எத்தனை விதங்களில் சுவைக்கமுடியும்? செடியைப்பிடுங்கி பச்சைக்கடலையை உரித்துத் தின்பதில் ஆரம்பிக்கும்.மிகத்தனித்துவமான சுவை கொண்டிருக்கும்.அறுவடை செய்த கடலைக்காயை வயலிலேயே சுட்டுத்தின்பது அடுத்து நடக்கும்.அடுத்தநாள் தண்ணீரில் கழுவி வேகவைப்பார்கள்.காயவைத்த பிறகு வறுத்தகடலையும் அதை நீரில் மிளகாய்ப்பொடி குழைத்து பிரட்டி எடுப்பதும் இன்னொரு சுவை.
கடலையை வறுத்து தூளாக்கித்தூவாத பொரியல் இல்லவே இல்லை.பூசணி,சுண்டைக்காய்,பாகற்காய்க்கு இந்தத்தூள் கட்டாயம்.கடலையின் மேல்தோலை எடுத்துவிடுவார்கள்.தோலில் உள்ள தயமின் எடுக்கப்பட்டுவிடுகிறது.மழைபெய்யும்போது இதமானது வறுத்த கடலைக்காய்தான்.சில நேரங்களில் சட்னியாக வடிவெடுக்கும்.கேழ்வரகுக்களிக்கு இந்தச் சட்னி தனிச்சுவை.
காய்ந்த காயை உரித்து தேவைப்பட்டபோது எண்ணெய் தயாரித்துக்கொள்வார்கள்.நம்முடைய பாரம்பரிய சமையலைவிட இன்று எண்ணெய் பயன்பாடு அதிகரித்துவிட்டது.சிலர் எண்ணெய்யை கண்டாலே அஞ்சுகிறார்கள்.நாம் காலம்காலமாக பயன்படுத்திவந்த கடலைஎண்ணெய் ஆரோக்கியமானது.உணவியல் நிபுணர்களால் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
நிலக்கடலை உயிர்ச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கிறது.நம்முடைய தினசரி பயன்பாட்டில் ஏதோவொருவிதத்தில் இருந்துவந்திருக்கிறது.சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதும் சாத்தியம்தான்.அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும்.உடலுக்கு அவசியமான தாதுக்களும்,பி வைட்டமினும்,நோயை எதிர்க்கும் புரதங்களும் இதன் தனிச்சிறப்பு.தினசரி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்தை உறுதிசெய்யும்.
ஆரோக்கியம் காத்த நிலக்கடலை
Reviewed by haru
on
November 12, 2013
Rating:
Reviewed by haru
on
November 12, 2013
Rating:





No comments