தென்னை இளநீர்-இயற்கை தந்த வரம்
கடுமையான தலைவலியில் நடந்துகொண்டிருந்தேன்.வெயில்காலத்தின் மாலையில் வயலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்.மாத்திரை வாங்கவேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் திரும்பிவரவேண்டும்.என்னையறியாமல் தென்னைமரத்தை நோக்கிப்போனேன்.ஒரு குச்சியை எடுத்து சிறியமரத்திலிருந்த இளநீரைப்பறித்தேன்.
அப்போதுதான் நீர்பிடிக்க ஆரம்பித்திருந்தது.கத்தியால் வெட்டவேண்டிய அவசியம் இல்லை.குச்சியில் ஓட்டைபோட்டு குடித்துவிடலாம்.கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது.முதல் இளநீரைக் குடித்துமுடித்தவுடன் தலைவலி காணாமல் போயிருந்தது.நிலத்தடிநீர் கிராமத்தின் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது.இன்று அந்தமரம் பட்டுப்போய்விட்டது.
தென்னை நம்முடைய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.வயசுக்கு வந்தால் குடிசை கட்ட தென்னைஓலை.சாவுக்கு தென்னை ஓலை.வெயில் காலத்தில் கூரை மீதுபோட தென்னைஓலை.மரம் இருக்கும் வீடுகளில் பருப்பைக்காயவைத்து எண்ணெய் ஆடிக் கொள்வார்கள்.குளித்துவிட்டு தலைக்கு எண்ணெய் வைக்காதவர்கள் திட்டுவாங்க வேண்டியிருக்கும்.
நல்ல காரியமோ, கெட்ட காரியமோ நமக்குத் தேங்காய்வேண்டும்.உயிர்பிரிந்தவுடன் தேங்காய் உடைப்பதுதான் முதல் வேலை.பிள்ளையாருக்கு சிதறுகாய் போடவேண்டும்.தேங்காயை தலைமீது உடைத்து கடவுளை வழிபடுபவர்கள் உண்டு.திருமணத்தில் தேங்காய்ப்பை கொடுப்பதுதான் அதிகம் வழக்கத்தில் இருந்தது.
கோழிக்கறி,அவரைப்பருப்பு குழம்புகளில் தேங்காய்த்துண்டுகள் அத்தனை சுவை.சுண்டல் என்றால் தேங்காய்த்துருவிப் போடவேண்டும்.திருவிழாக்களில் விளக்குமாவு பிடிப்பார்கள்.எனக்குத்தேங்காயுடன் சாப்பிட்டுத்தான் பழக்கம்.மறக்கமுடியாத ருசியாக இருக்கும்.பொரியோடு தேங்காய் சாப்பிடுவது மாலைநேர சந்தோஷம்.
இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.களைப்பைப்போக்கிவிடுகிறது.சிறுநீரகக்கல்லுக்கு அருமருந்தாக இருக்கிறது.கிருமிகளை எதிர்த்துப்போரிடுகிறது.இரத்த அழுத்தத்தைக்குறைத்துவிடுகிறது.சிறுகுடல் நலத்தை உறுதிசெய்வது,அமில கார சமநிலையை சீர்செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அவசியமான உயிர்ச்சத்துக்களும்,நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.
குடல் புழுக்களுக்கு இளநீருடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயையும் சாப்பிடச்சொல்வார்கள்.குடல்புண்ணுக்கும்,வயிற்றில் கொட்டும் அமிலத்துக்கும் நல்லது.சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணப்படுத்திவிடுகிறது.உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜன்,ஊட்டச்சத்துக்களை கொண்டுசேர்ப்பதை இளநீர் மேம்படுத்தும்.
அம்மை போட்டுவிட்டால் இளநீர்தான் கிராமங்களில் முக்கிய மருந்து.இளநீரில் உள்ள லாரிக் அமிலம் உடல் வைரஸ்களை எதிர்க்க உதவுகிறது.பெரும்பாலும் உதடுகளுக்கு அருகே நீர்கோர்த்து கொப்புளங்கள் வரும்.பல்லி ஒண்ணுக்குப்போய்விட்டது என்பார்கள்.ஹெர்பீஸ் வைரஸினால் ஏற்படும் பிரச்சினை அது.இளநீர் குடிக்கலாம்.
சிறுநீரகம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இளநீர் அருந்தக்கூடாது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.(அவ்வளவெல்லாம் யாரும் குடிக்கமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்)மிக அதிக அளவு இளநீர் பொட்டாசிய அளவை அதிகப்படுத்தும்.நீரிழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.
தென்னை இளநீர்-இயற்கை தந்த வரம்
Reviewed by haru
on
February 14, 2014
Rating:
Reviewed by haru
on
February 14, 2014
Rating:





No comments