உணவுகெட்டுப்போவது எப்போது?
நண்பர் ஒருவர் சாம்பார் வாங்க கடைக்கு ஓடினார்.வீட்டிலிருந்து எடுத்து வந்த சாம்பார் கெட்டுப்போய்விட்டது.வாசனையை வைத்து அவர் கெட்டுப்போய்விட்டதாக முடிவு செய்தார்.சிலருக்கு இந்த அனுபவம் இருக்கக்கூடும்.வாசனை வந்த பின்னர்தான் உணவு கெட்டுப்போனதாகக் கருதமுடியுமா? அல்லது அதற்கு சில நிமிடங்கள்,மணித்துளிகள் முன்பே கெட்டுப்போனதாக எடுத்துக்கொள்ளலாமா?
இரண்டாவதாகச் சொன்னதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.கோடைகாலத்தில் உணவுப்பொருள் கெட்டுப்போவது அதிகம்.நுண்ணியிரிகள் வளர சரியான காலநிலை நிலவுவது ஒரு காரணம்.சில நாட்களில் காலையில் தயாரித்த உணவை இரவு சாப்பிடும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.இதைத்தவிர்ப்பதே பாதுகாப்பானது.
கோடையில் சாம்பாரில் புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள்.சுவை கொஞ்சம் மாறும் என்றாலும் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.கிராமங்களிலிருந்து கோயிலுக்குப் போனால் கட்டுச்சோறுதான்.புளிசாதம் இல்லாமல் புண்ணியப் பயணம் இல்லை.விரைவில் கெட்டுப்போகாது என்பதுதான் காரணம்.தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் என்று தவிர்ப்பார்கள்.அவரைப்பருப்பு போன்றவையும் விரைவில் வாசனை வந்துவிடும்
புளிச்சாற்றைத் தயாரித்து சோற்றில் ஊற்றிக் கிளறினால் புளிச்சோறு.துணியில் கட்டிக்கொண்டால் கட்டுச்சோறு.பயன்படுத்தி கிழிந்துபோன சுத்தமான வேட்டிகள் கட்டுச்சோறுக்காக எடுத்து வைத்திருப்பார்கள்.இப்போது கட்டுச்சோறு கட்டிக்கொண்டிருப்பதைவிட ஹோட்டலில் சாப்பிடுவது அதிகம்.பலருக்குச் சுவை அதிக விருப்பமானதாக இருக்கிறது.
நண்பர் ஒருவர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.உணவை சாப்பிட்டவர்கள் வாங்கப்பட்ட இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.நகரில் பலருக்கு குறிப்பிட்ட உணவகத்தில் சுவையாக இருக்கும் என்ற எண்ணம் இருப்பது எனக்குத்தெரியும்.குறுகிய காலத்தில் பிரபலமடைந்துவிட்டது.விலை கூடுதலாக இருந்தாலும் பலர் பரிந்துரை செய்வதை கவனித்திருக்கிறேன்.
சமீபத்தில் மேலே குறிப்பிட்ட உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.உணவுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார்.ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும்போது நாங்கள் சேர்க்கமாட்டோம் என்றும் சொன்னார்.ஆனால் அஜினோமோட்டோ நன்மையா? தீமையா? என்பதற்கான பதிலை அவரால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை.
இன்னொரு நண்பர் திருமண நிகழ்வுக்காக சமையல்காரரை ஏற்பாடு செய்யப்போனார்.உணவில் அஜினோமோட்டோ சேர்க்கவேண்டாம் என்று சொன்னதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.ஒப்பந்தமே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.அஜினோமோட்டோ போடாவிட்டால் சுவை கிடைக்காது என்றும்,தனக்கு பெயர் கிடைக்காது என்றும் சொன்னார்.அடுத்து தன்னை யாரும் தேடிவரமாட்டார்கள்,வேறுஆளைப்பார்க்குமாறு ஒதுங்கினார்.
ஹோட்டலில் சாப்பிடுவது,வீட்டுக்கு வாங்கிப்போவது இப்போது அதிகரித்திருக்கிறது.கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப்போக வேண்டிய நிலை,வேலைப்பளுவால் வரும் சோர்வு,வீட்டுக்குத் திரும்புவதில் தாமதம் போன்றவை காரணமாகச் சொல்லப்படுகின்றன.இவற்றில் ஓரளவு உணமையும் இருக்கக் கூடும்.ஆனால் அஜினோமோட்டோ முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் ஏதேனும் காரணம் சொல்லி உணவகங்களை நாடுகிறார்கள்.மிகக் குறைந்த நேரத்தில் நம்மால் ஏராளமான உணவுகளை வீட்டில் தயாரிக்க முடியும்.கிராமத்தில் நாள்முழுக்க நிலத்தில் வேலைசெய்துவிட்டு அல்லது கூலிக்கு போய்விட்டு வந்து விறகு அடுப்பில் சமையல் செய்து குழந்தைகளூக்கு பொங்கிப்போடவேண்டும்.அப்படி வளர்ந்த குழந்தைகள் இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்ய சலித்துக்கொண்டு ஹோட்டலை நாடுகிறார்கள்.
ராகி,ரொட்டி,சோளரொட்டி,உப்புமா என்று ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஏராளம் இருக்கின்றன.வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் என்று சில மெஸ்களை சொல்லி பரிந்துரைப்பார்கள்.இன்று ஹோட்டல் சுவை போல வீட்டில் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார்கள்.துரித உணவுகள் இல்லாத தெருக்கள் இன்று இல்லை.அத்தனையும் அஜினோமோட்டோ செய்யும் மாயம்.
அமில எதிர்ப்பு மருந்துகள் ஏராளமாக விற்பனை ஆகின்றன.இவற்றில் பெரும்பாலும் மருந்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்கப்படுபவை.இந்நிலைக்கு முக்கியக் காரணமாக வெளியில் சாப்பிடுவதைச் சொல்லலாம்.குடல் புண்ணாகிவிட்டால் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உறிஞ்சப்படுவது பாதிக்கப்பட்டுவிடுகிறது.பணத்தைக்கொடுத்து உடலுக்குக் கேட்டையும் தேடிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை எப்படி அழைக்கலாம்?
இரவு உணவுகளில் வெளியில் இருந்து வாங்கிவருவது பல குடும்பங்களில் அதிகமாகி வருகிறது சோர்வு,தலைவலி,வயிற்றில் எரிச்சல்,செரிமானமின்மை போன்றவற்றை கடைகளில் மாத்திரை வாங்கியே நிவாரணம் தேடுகிறார்கள்.அதற்குக் காரணமானவற்றைக் கண்டறிய முயற்சிப்பதே இல்லை.முழுமையான விழிப்புணர்வு இல்லாமலேயே கடந்து சென்றுவிடுகிறார்கள்.
இத்தளத்தின் உணவு குறித்த பதிவுகள் உணவும்உடல்நலமும் என்ற தலைப்பில் மென்நூலாக வெளியிடப்பட்டுள்ளது.நூலைப் பதிவிறக்க
உணவுகெட்டுப்போவது எப்போது?
Reviewed by haru
on
April 09, 2014
Rating:
No comments