அறிவும் உணர்ச்சிகளும்
இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச் சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க மாட்டேங்குறன்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த நிலைமைதான்.
-தி இந்து நேர்காணலில் ஞான ராஜசேகரன்.
பாரதி,பெரியார் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் தற்போது கணித மேதை ராமானுஜம் பற்றி திரைப்படம் இயக்கி வருகிறார்.முன்பும் ஒரு பேட்டியில் அவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஒருவர்அறிவுஜீவியாக,மேதையாகஇருக்கவேண்டியதில்லை.மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் திறமை,தகுதி பெற்றிருந்தால்கூட சிரமங்களை சந்திக்க நேரும்.உன்னிடம் பணமில்லை என்று சொல்லிப்பாருங்கள்.உண்மையைஒப்புக்கொண்டுவிடுவார்கள்.அறிவில்லை என்று சொன்னால் ஜென்ம எதிரி ஆகிவிடுவார்.தனக்கு அறிவில்லை என்று ஒருவர் கருதுவது அவருக்கு பெரும் குழப்பத்தைத் தரும்.தாழ்வு மனப்பான்மையில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்.விளைவாக மனம் பெரிதளவு பாதிக்கப்படக்கூடும்.யாரையும் விட முதன்மையாக இருக்கவே மனிதன் துடித்துக்கொண்டிருக்கிறான்.சுயமதிப்பு இழந்து தவிப்பதை அவன் விரும்பமாட்டான்.
அறிவு பெற்றவனை சராசரியாக்க முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்தப் படுவார்.அதிகாரி மட்டம் தட்டி ரசிப்பார்.அவனைப்பற்றி தரமற்றத் தகவல்களைப் பரப்புவார்கள்.அவனது அறிவை மறைக்க எப்போதும் முயற்சி செய்தவாறு இருப்பார்கள்.முன்னேற்றத்திற்குத் தடை போட எப்போதும் விரும்புவார்கள்.இதையெல்லாம் தவிர்ப்பது கஷ்டம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து ரசித்தது இது.சுஜாதா எழுதியதாகத்தான் நினைவு.வேகமாக இருசக்கர வாகனத்தில் கடக்கும் இளைஞனை நிறுத்திக் காவலர் கேட்டார், ``அறிவிருக்கா?.`` இளைஞரின் பதில் ``ஏன் உங்களுக்கு வேணுமா?.``அறிவாளி என்பதற்கு அதிகம் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது என்பதே பலரது கருத்து.மெய்ப்பொருள் காண்பதறிவு என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.
மெய்ப்பொருளை காண்பதில்தான் நமக்குப்பிரச்சினை இருக்கிறது.யார் சொல்வதை நம்புவது? என்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேட்கிறோம்.நல்லவர்கள் என்று நம்பி ஏமாந்துபோகிறோம்.குடும்பத்தில் உள்ளவர்களது நடத்தைகூட சில நேரங்களில் அதிர்ச்சியளித்துவிடுகிறது.அறிவுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கா? அறிவில்லையா? என்ற வார்த்தைகள் வெளிவரும் சூழ்நிலையைக் கவனியுங்கள்.தனக்குப் பயன்படாத நடத்தை,சில நேரங்களில் சமூகத்துக்கு எதிரான நடத்தையை அறிவில்லை என்று சொல்லக்கூடும்.
உணர்ச்சி வசப்பட்டு சிந்திக்காத நிலையை அறிவு என்று சொல்லலாம்.உணர்ச்சிமிகுந்திருப்பவரை நாம் பைத்தியம் என்று குறிப்பிடுகிறோம்.அதிக கோபம் என்றில்லை,அதிகம் சிரித்தால்கூட மன நலன் பற்றி சந்தேகப்படுகிறோம்.பொறாமை கொண்ட ஒருவன் முதிர்ச்சியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை.அறிவுக்கும் உணர்ச்சிக்கும்தான் எப்போதும் போராட்டம்.துன்பத்தைத் தருவது உணர்ச்சிகள்தான்.
உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதில் வல்லவரை அறிவாளி என்று அழைக்கலாம்.மெய்ப்பொருளைக் காண்பது அவரால் முடியும்.சராசரி மனிதர்களின் தாக்குதலில் பெருமளவு அவர் பாதிக்கப்படமாட்டார்.அறிவைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக்கொள்வார்.அதிக மகிழ்ச்சி கொண்டுள்ளவராக அவர் இருக்கிறார்.உண்மையில் கல்வி என்பது உணர்ச்சிகளை மேலாண்மை செய்யக் கற்றுக்கொடுத்தல்தான்.
அறிவும் உணர்ச்சிகளும்
Reviewed by haru
on
May 09, 2014
Rating:
No comments