நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
நண்பனைப்பார்க்கப் பாவமாக இருந்தது.கிட்டத்தட்ட முழு உடல்நலப் பரிசோதனை செய்துவிட்டிருந்தான்.அவனுக்கு எந்த நோயும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.ஆனால் இன்னமும் அவன் அமைதியடையவில்லை." இன்னொரு மருத்துவரிடம் பரிசோதனை செய்யலாமா? என்று கேட்டான்."என்ன ஆள் ரொம்ப டல்லா இருக்கீங்க" என்று சிலர் கேட்ட பின்பு ஏற்பட்ட பிரச்சினை இது.
பார்க்கிற நாலு பேர் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.வீடு கட்டும் அலைச்சலில் சரியாக சவரம் கூட செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.அந்த நான்கு பேருக்கு டல்லாக இருப்பதாகத் தோன்றுவது சாத்தியம்தான்.நம்மைச் சுற்றி உள்ள நான்கு பேர் தான் பலரது வாழ்க்கையையே தீர்மானிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
நடுத்தரக் குடும்பங்கள் எப்போதும் அந்த நான்கு பேரை நெஞ்சில் இருத்தியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.''பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?'' நாலு பேர் என்ன நினைப்பாங்க?'' என்பது பிரபலமான வார்த்தைகள்.ஒருவர் அணியும் உடையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.சாப்பிடும் சாப்பாடு,நடத்தை எல்லாவற்றிலும் சமூகத்தின் பங்கு இருக்கிறது.
ஒருவரது மகனோ,மகளோ என்ன படிக்கவேண்டும் என்பதை அண்டை வீட்டினரோ உறவினர்களோ தீர்மானிக்கிறார்கள்.சுயமாக சிந்திப்பவனை சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.ஒரு செயலைத்தொடங்கும் முன்பு இதற்காகவே பலரிடம் கருத்துக்கேட்பவர்களைப் பார்க்கலாம்.யாராவது ஒருவர் எதிராக பேசிவிட்டாலே நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
இன்னும் சிலர் வசதியாக மற்றவர்கள் செயது கொண்டிருப்பதை நகல் எடுப்பார்கள்.ஈயடிச்சான் காப்பி என்பது போல! நண்பர் ஒருவர் விலை உயர்ந்த துணி எடுத்து வந்தார்.இதுவரை அவ்வளவு விலையில் உடை எடுத்து அவருக்குப் பழக்கமில்லை.அலுவலகத்தில் ஒருவர் '' உங்களுக்கு இது நல்லா இல்ல சார்!'' என்று சொல்லிவிட்டார்.ஆசையாக எடுத்த உடையை அவரது தம்பிக்குக் கொடுத்து விட்டார்.
அவர் பொறாமையால் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நான்கு பேரை நினைத்து நினைத்து நல்ல வாழ்க்கையை இழந்தவர்கள் இருக்கிறார்கள்.உடன் இருக்கும் நண்பர்களின் பொறாமையால் நல்ல காதலியை இழந்த ஆண்கள் இருக்கிறார்கள்.காதலனை விட்டுவிட்டுப் புலம்புபவர்கள் இருக்கிறார்கள்.
நம்மை மற்றவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு இல்லாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம்.நாம் நான்கு பேர் சொல்வதை புறக்கணிக்க வேண்டுமா? மற்றவர்களை ஒதுக்கிவிட்டு தனியாக வாழ முடியுமா? இறுதியில் சுமந்து செல்லக்கூட நாலுபேர் வேண்டுமே? -தொடர்ச்சி அடுத்த பதிவில்.
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
Reviewed by haru
on
December 22, 2014
Rating:
No comments