டென்ஷனைக்குறைக்கலாம் வாருங்கள்
டென்ஷனா இருக்கு சார்! பெரும்பாலும் குறித்த நேரத்தில் எதிர்பார்த்த ஒன்று நடக்காதபோது,பணியை முடிக்க முடியாத நிலையில் புலம்புவார்கள்.எனக்கு ஒருவரை தெரியும்.அலுவலகம் செல்லும் வழியில் யாரைப்பார்த்தாலும் விடமாட்டார்.மனிதருக்கு பேசுவதில் அப்படி ஒரு பைத்தியம்.தெரிந்தவர்கள் தவிர்க்கப் பார்த்தாலும் விடமாட்டார்.எதிரில் வந்தவர் நேரம் ஆகிறதென்று கிளம்பிப் போன பின்னர் மணி பார்த்து வண்டியை முறுக்குவார்.
இதுவரை மனிதர்கள் பாதிக்கபடவில்லை.ஆனால் ஒருமுறை நாய்மீது மோதி விபத்து.எப்போதும் கொஞ்ச நேரம் தாமதமாக பணிக்கு வருவது அவருக்கு வழக்கமாகிவிட்ட்து.மதியம் சாப்பிட உட்கார்ந்தாலும் பேசிக்கொண்டே இருப்பார்.மாலை வீடு திரும்பவும் நேரமாகும்.குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.
நேர நிர்வாகம் என்பது உற்பத்தி துறையில் முக்கியமான விஷயம்.நாம் தனிமனிதன் நேரத்தை விழுங்கும் பழக்கங்களை மட்டும் பேசலாம்.மேலே குறிப்பிட்டுள்ள மனிதரைப்போல பலரும் சிக்கிக் கொள்கிறார்கள்.மிக அவசியமில்லாத விஷயங்களில் நேரத்தை செலவழிப்பதே பெரும்பாலான தொல்லைகளுக்கு காரணமாக இருக்கிறது.
வழியில் தெரிந்தவர்களை பார்த்தால் குறைவான பேச்சோ அல்லது புன்னகை மட்டுமோ போதுமானதாக இருக்கலாம்.இதனால் வேகமாக செல்வது தவிர்க்கப்பட்டு விபத்துகளை தவிர்க்கலாம்.மேலதிகாரியிடம் திட்டு வாங்கத் தேவையில்லை.டென்ஷன் இல்லை.வேலையையும் சீக்கிரம் தொடங்கி நேரத்துக்கு முடிக்க முடியும்.
மனைவி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் உண்டு.அவர்களில் அதிகம் இந்த மாதிரி முக்கியமில்லாதவை நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்.சிலர் உண்மையில் கடுமையான வேலைச்சுமையில் இருப்பார்கள்.அவர்கள் பல வேலைகளையும் பட்டியல் போட்டு செயல்படலாம்.முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை தரலாம்.
மின் கட்டணம் செலுத்த இறுதி தேதிக்கு நான்கு நாட்கள் இருக்கும்.ஒரு வேலையை இன்று மாலையுடன் முடிக்கவேண்டி இருக்கும்.சிலர் மின் கட்டணம் செலுத்த போய்விட்டு டென்ஷனுடன் இரவுவரை வேலை செய்து கொண்டிருப்பார்கள்.எதை முன்னர் செய்யவேண்டும் என்று வரிசைப்படுத்தி வைத்து செய்யலாம்.
குறித்த நேரத்தில் ஒரு வேலையை செய்யமுடியாவிட்டால் எரிச்சல்,கோபம்,சலிப்பு என்று மனநிலையில் மாற்றம் வந்துவிடுகிறது.நாம் சரியாக திட்டமிடாவிட்டால் சரியாக செய்பவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதும் நடக்கும்.மற்றவர்கள் வந்து உதவ வேண்டுமென்று நினைப்போம்.தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் வழி இது.
சரியாக நேரத்தை திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கையும் எளிது.டென்ஷனும் குறைவு.குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குறைபாடும் நீங்கும்.” போனால் கிடைக்காது,பொழுது விடிஞ்சால் சிக்காது” என்பார்கள்.அவசியமற்ற பேச்சுகளுக்கு நேரத்தை குறைத்து,திட்டமிட்டு செயல்பட்டால் டென்ஷன் போயே போச்சு!பெரும்பாலான டென்ஷன் நம்மால் தடுக்கமுடியும்.நேரத்தை சரியாக மேலாண்மை செய்வதும் ஒரு முக்கிய வழி.
டென்ஷனைக்குறைக்கலாம் வாருங்கள்
Reviewed by haru
on
November 28, 2011
Rating:
No comments