இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?
பல நேரங்களில் ஒவ்வொருவரும் உச்சரித்திருப்போம்.’’ இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?” அரசியல்வாதிகளை பார்த்து,சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களை பார்த்து,குடிப்பவர்களை,புகை பிடிப்பவர்களை,லஞ்சம் வாங்குபவர்களை பார்த்து என்று பட்டியல் நீளும்.எத்தனை பேர் விமர்சித்தாலும்,சமூகம் குறுக்கே நின்றாலும் அவர்களது செயலை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
திருடனை கைது செய்கிறார்கள்,தண்டனை கொடுக்கிறார்கள்.வெளியே வந்து மீண்டும் திருட ஆரம்பிக்கிறான்.லஞ்சம் வாங்கி ஒருவரை கைது செய்கிறார்கள்.இருக்கும் மற்றவர்கள் யாரும் வாங்காமல் இருப்பதில்லை.கள்ளச்சாராயம் விற்பவனை போலீஸ் பிடித்துப்போகும்.வெளியில் வந்தபின் மீண்டும் அதே தொழிலை செய்வார்கள்.மீண்டும் கைது.
அவர் திருந்திவிட்டார்.இனி புகை பிடிக்கமாட்டார் என்று பேசிக் கொள்வார்கள்.ஆனால் திடீரென்று ஆரம்பித்து விடுவார். பணி புரியும் இட்த்தில் எப்போதும் பெண்களுடன் அரட்டை அடித்து கொண்டிருப்பார் ஒருவர்.சில காலம் புகை பிடிப்பதும்,சில காலம் விட்டுவிடுவதுமாக இவருடன் பணி புரியும் நண்பர் ஒருவர் கவனித்துச் சொன்னது” இவர் பெண்களுடன் பேசும்போது புகை பிடிப்பதில்லை,அவர்களுடன் சண்டை வந்தால் மீண்டும் ஆரம்பித்து விடுகிறார்”
என்னை மிகவும் கவர்ந்த்து.பெண்களிடம் சண்டை போட்டு பேசாமலிருக்கும்போது புகை பிடிக்கிறார்.இணக்கமான சூழல் நிலவும்போது அப்படி இல்லை.மற்றவர்களுக்கும் அப்படித்தானா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும் இது மனசு சம்பந்தப் பட்டிருக்கிறது.மனதில் ஏற்படும் மாற்றங்கள் பழக்க வழக்கங்களில் எதிரொலிக்கத்தான் செய்யும்.
சரி இவர்களை திருத்தவே முடியாதா? மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்று மையம் இருக்கிறது.எல்லா மது அடிமைகளையும் மீட்டுவிட முடியாது.அவர்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.தொடர்ந்து ஆலோசனையும் சிகிச்சையும் இருக்கும்.நம்பிச் சென்ற பலர் மீண்டு வெளியே வந்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் சொன்னாலும் கேட்பதில்லை என்கிறோம்.அறிவுரையை யாரும் விரும்புவதில்லை என்பதோடு அவர்களுடைய தவறான நம்பிக்கைகளும் காரணம்.சினிமாவில் குத்துப்பாட்டும்,நாலு சண்டைக்காட்சியும் கட்டாயம் தேவை என்ற நம்பிக்கை இருந்த்து.ஆனால் எல்லா படமும் வெற்றி பெற்றதாக சொல்ல முடியாது.ஒரு கட்ட்த்தில் கவர்ச்சிக்கென்று தனியாக நடிகைகள் இருந்தார்கள்.
இதை சேர்த்தால்தான் என் பதிவை படிக்கிறார்கள்,திருடி போட்டால்தான் நமது தளம் படிக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.அது தவறான நம்பிக்கையாக இருக்கலாம்.ஆனாலும் அவர்கள் நம்புகிறார்கள்.தண்டனை தந்தாலும் திரும்ப செய்யாமல் இருக்க மாட்டார்கள்.சிறைக்கு சென்று வந்தாலும் அதையே செய்வது போலத்தான்!
இவங்களெல்லாம் திருந்தவே மாட்டாங்களா? என்று நீங்கள் யாரைப்பற்றியாவது கூறும்போது கொஞ்சம் கவனியுங்கள்.அவர்களை ஆதரிக்க எப்போதும் ஆட்களும் இருப்பார்கள்.ஊரில் பத்துபேர் இருந்தாலும் அத்தனை பேரும் அதை தவறென்று சொல்வதில்லை.லஞ்சம் வாங்குபவனுக்கு,திருடுபவனுக்கு இது என்ன பெரிய விஷயம் என்று சொல்லும் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.தவிர சில பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாகிவிடுகிறான்.
இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?
Reviewed by haru
on
November 08, 2011
Rating:
No comments