சத்திய சோதனைகள்.
சத்தியத்தை கடைபிடித்தால் சோதனைக்கு உள்ளாகித்தான் தீர வேண்டுமா?நேர்மையாக இருப்பது பெரிய தவறா? எங்கெங்கும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடும்போது நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றால்? அப்படியும் யாரோ ஒருவர் இருக்கவே செய்கிறார்கள்.பிறருடைய ஏளனத்தையும்,நமட்டுச்சிரிப்புக்கும் ஆளாகி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நேர்மை என்பது இன்று சமூகத்திற்கு எதிரான குணமாக பார்க்கப்படுகிறது.லஞ்சம் வாங்கமாட்டேன் என்பவர் ஓநாய்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பவர் போல இருக்கிறார்.கிட்ட்த்தட்ட தனிமைப்படுத்தப் படுகிறார்.ஒதுக்கப் படுகிறார்.அலுவலகத்தில் மனசாட்சி போல நடமாடிக் கொண்டிருக்கிறார்.மற்றவர்களை அந்த மனசாட்சி உறுத்துகிறது.
தாங்கள் செய்வது குற்றம் என்ற எண்ணத்தை வலிமையாக உருவாக்குகிறார்.அவர்களிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் வெறுக்கப்படுகிறார்.சிக்கலான சூழ்நிலைகளில் உதவி தேவைப்பட்டால் சக பணியாளர்கள் கண்டு கொள்வதில்லை.காட்டிக்கொடுப்பாரோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.யாருடனும் அவர் நெருக்கமானவர் இல்லை.
சத்தியத்தை கடைபிடிப்பேன் என்று சொல்லி ஏன் இத்தனை சோதனைகளை அனுபவிக்க வேண்டும்.இப்படி ஒதுக்கப்படுவதால் மனம் பாதிக்கப்படாதா? பாதிக்கப்படாமல் இருப்பதும் சாத்தியம்தான்.மற்றவர்கள் பார்வையில் இவர் பைத்தியக்காரனாக இருக்கும்போது இவருக்கு மற்றவர்கள் அப்படி தெரிவார்கள்.தான் நேர்மையானவன் என்ற எண்ணம் சுய மதிப்பை அதிகப்படுத்துகிறது.
தன்னை அவர் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறார்.மோசமான பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருப்பவர்களே அதிகம்.லஞ்சம் வாங்குபவர்களை இவர் கேலியாகப் பார்ப்பார்.இவர்களில் சிலர் மனதளவில் பாதிக்கப்படுவதும் உண்டு.சரி ஏன் யாரோ ஓரிருவர் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?
ஒருவர் என்னிடம் கை சுத்தமான ஆள் ஒருவரைப்பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது.” அவனுக்கு பயம் சார்,தைரியம் இல்ல! மாட்டிக்கிட்டா மானம் போயிடுமேன்னு நடுக்கம்,நாட்டக் காப்பாத்தப்போறானா என்ன? கொஞ்சம் எரிச்சலாக சொன்னாலும் இப்படி இருக்கவும் வாய்ப்புண்டு.சட்டம்,விதிகள் ஆகியவற்றின் நோக்கம் இதுதான்.தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் குற்றம் செய்யாமல் இருப்பார்கள்.
சிலர் நல்ல புத்தகங்களை படித்து தொலைத்து விடுகிறார்கள்.தனக்கென்று கொள்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அநியாயத்திற்கு எதிராக எப்போதும் சிந்திக்கிறார்கள்.ஒழுக்கம் நிறைந்த ஆளுமையை பெற்றிருக்கிறார்கள்.மிகச் சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பொய் சொல்லி,தவறு செய்தே பழக்கம் இருக்காது.நல்ல சூழலில் இருந்து வந்திருப்பார்கள்.
சத்திய சோதனைகள்.
Reviewed by haru
on
December 21, 2011
Rating:
No comments