பிரச்சினைகளுக்கு அறிவென்னும் ஆயுதம்.
நண்பரின் பள்ளி ஆண்டு விழாவின்போது ஒருவர் பேசியது:’’ அறிவு மட்டும் இருந்தால் எந்த சூழ்நிலைகளையும்,பிரச்சினைகளையும் சமாளிக்கலாம்.புதியதல்ல! திருவள்ளுவர் அறிவுடைமை என்று பத்து குறள் தந்துவிட்டார்.அப்பா என்றால் அறிவு,அம்மா என்றால் அன்பு என்று சொன்னார்கள்.அன்பு,அறிவு இரண்டும் ஒருவரிடம் ஒன்றாக இணைந்தால் வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்?
அறிவு என்பது தனிச்சிறப்பாக பொது அறிவை குறிக்கிறது.அடிப்படையாக அறிவியல்,பூகோளம்,வரலாறு,கலாச்சாரம்,மொழி,தேசம் மற்றும் நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்திருப்பது.ஆனால் பலரும் படிப்பது வேலை பெறவேண்டும் என்ற காரணமாக மட்டும்தான்.நம்மைபோன்ற வளரும் நாடுகளில் பணம் சேர்ப்பதே முதன்மை நோக்கமாக இருக்கிறது.பணியாளர் தேர்வாணையம் அடிக்கடி தேர்வு அறிவித்தால் நல்லது என்று நண்பனிடம் ஒருமுறை சொன்னேன்.அப்போது இளைஞர்கள் பல விஷயங்களை படிக்கும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
வேலையில்லாத பட்ட்தாரிகள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பது சமூகத்துக்கும் நல்லது.அவர்களுக்கும் நல்லது.மன நலமும்,உடல்நலமும் ஓரளவு ஆரோக்கியமாகவும் இருக்கும்.துறை சார்ந்த அறிவு ஒருவரது தகுதியை உயர்த்துகிறது.பணியிட்த்தில் விரும்பத்தக்கவராக ஆக்குகிறது.துறை சார்ந்த புதிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேலை கிடைத்துவிட்டால் மீண்டும் புத்தகத்தை திரும்பிப்பார்ப்பதில்லை.பணம் சேர்க்கும் எண்ணமே அதிகரித்து விடுகிறது.கல்வியை விட,அதனால் பெறும் அறிவைவிட பணம் பெரிய விஷயமா? பணம் இல்லாவிட்டால் எதுவுமில்லை.ஆனால் அறிவை ஒதுக்கித்தள்ள வேண்டுமா? பின் புறக்கணிப்பது ஏன்?
பணம் படைத்தவனைத்தான் நாலு பேர் மதிக்கிறார்கள்.செல்வந்தர்களை சுற்று எப்போதும் கூட்டம் இருக்கிறது.எனவே நமக்கும் பணம் அதிகம் இருந்தால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.அப்புறம் புத்தகத்துக்கு என்ன வேலை இருக்கிறது என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.வேலை கிடைத்த பிறகு வீடு,மற்ற கனவுகள் என்று தாண்டிப்போய் விடுகிறார்கள்.
பல்வேறு தருணங்களில் நான் கவனித்தவரை பணக்காரனுக்கு இருக்கும் மரியாதை போலியானது.வசதி படைத்தவனை குனிந்து கும்பிடுவார்கள்.ஆள் போன பின்பு வேறு மாதிரி பேசுவார்கள்.ஆனால் அறிவாளிக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது வேறு விஷயம்.மரியாதை இதயத்திலிருந்து வருவதை பார்க்க முடியும்.
முதல் வரிக்கு வருவோம்.அறிவிருந்தால்தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.தெரிந்த விஷயம்தானே! ஆமாம். மனிதனின் மிகப்பெரிய பிரச்சினை தவறான எண்ணங்களும் அதனால் விளையும் உணர்ச்சிகளும்தான்.சரியான எண்ணங்களை தரும் ஆற்றல் அறிவுக்கு மட்டுமே உண்டு.
நான் அறிவில்லாதவன் என்று யாரும் நம்மை நினைத்துக்கொள்வதில்லை.அப்படி இருந்தால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.அதுவும் பிரச்சினைதான்.இன்றைய தினம் நான் எனது துறை தொடர்பாக அல்லது பொது அறிவை அப்டேட் செய்தேனா? என்பதை கவனிக்கவேண்டும்.ஏனென்றால் அறிவு என்பது தினமும் கற்றுக்கொண்டே இருத்தல்!
பிரச்சினைகளுக்கு அறிவென்னும் ஆயுதம்.
Reviewed by haru
on
December 05, 2011
Rating:
Reviewed by haru
on
December 05, 2011
Rating:





No comments