சப்பாத்தியா? சாதமா?
நீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்தி போதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.
உடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிர நெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது.ராகி பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்கு செய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.
முதியவர் சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில் அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராத முக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன்.அறுவடைக்குப்பின் களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போது அரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம் பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.
சாதம் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனக்கு ரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையை நட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள் போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.
சில வாரங்கள் கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்.” நிறைய பேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே? உனக்கு அதில் உடன்பாடு இல்லையா? என்று கேட்டேன்.” ”அதெல்லாம் சும்மா! அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்”.அவர் சொன்னது நிஜம்தான்.
கோதுமை,அரிசி இரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டி இருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பது போலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.
சப்பாத்தியா? சாதமா?
Reviewed by haru
on
January 30, 2012
Rating:
No comments