நண்பனின் பொங்கல் வேட்டை.
சினிமாவுக்கு போகலாம் என்று அழைத்தான் நண்பன். 5 காட்சியா? டேய் நீ எந்த காலத்துலடா இருக்கே? அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு! அவனவன் 4 காட்சி ஓட்டறதுக்கே கண்ணுமுழி பிதுங்கி கிடக்கிறான்.பழைய காலத்து ஆளாக இருக்கிறானே என்று நினைத்திருக்க வேண்டும். அதெல்லாம் போகில எரிச்சாச்சு என்றான்.நான் சொன்னேன்,இதற்கும் போகிக்கும் என்ன சம்பந்தம்? மழைக்காலம் முடிந்து ஈரத்தில் பழைய துணிகள் போன்றவற்றில் பூஞ்சை தொற்றியிருக்கும்.அவற்றை எரிப்பதற்கு சரியான நேரம் இது.ஒரு மாதம் கழித்து வெயில் ஆரம்பித்துவிடும்.போதும் நிறுத்து!சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா?
கிராமத்தில் போரடிப்பது போல ஆகிவிடுகிறது.ஒலிப்பெருக்கி சத்தம் பல நேரங்களில் இனிமையாக இல்லை.கோயிலின் முன்னால் மாடுகளை கொண்டுவந்து நிறுத்தினால் இவ்வளவுதானா? என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது.எனக்கும் சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. சரி,எந்த படம் நல்லா இருக்காம்? என்றேன்.விமர்சன்ங்களை கூட படிக்க முடியவில்லை.கணினியை பார்த்து சில நாட்கள் ஆகிறது.ஏதோ ஒண்ணு வாடா! பொழுது போனா சரி! பழைய விஷயங்களை பேசிக் கொண்டே பயணம் .ஒரு மணி நேரத்திற்கு முன்பே அரங்கம் முன்னால் அலைந்து முட்டிமோதி டிக்கெட் வாங்கி சினிமா பார்த்த சிறுவயது அனுபவம் இப்போது இருக்காது.
நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போய் நின்றோம்.50 ரூபாய் டிக்கெட்.ஹவுஸ்புல் என்று ஒரு தகவல் பலகை இருக்கும்.அதை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அதையும் போகியில் போட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எரித்து விட்டிருப்பார்களோ? இருக்கைகள் காலியாக இருந்து கொண்டிருந்த்து.படம் ஆரம்பிக்கவில்லை.சலிப்பாக இருக்கிறது.பேசாமல் ஏதேனும் இணைய மையத்துக்கு போயிருக்கலாம்.பதிவுகளை படித்து கருத்துரை சொல்லியிருக்கலாம்.ஆனால் திறந்திருப்பது சாத்தியமில்லை.
சத்யன் மெஷினுக்கு வரையறை சொல்லும்போது நண்பன் சொன்னான்.” நல்ல விஷயம் இல்ல!” படம் அவன் சொன்னதைப் போன்று முக்கியமான ஒன்றை பேசுவதாகவே படுகிறது.மனப்பாட கல்வி,இன்றைய சாரமற்ற பயனில்லாத கல்விமுறை,இறுக்கமான கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்,பெற்றோர்களின் ஆசைக்கு கனவுகளை,திறமைகளை பலியாக்கும் பிள்ளைகள்.இவையெல்லாம் அதிகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.சமூக மாற்றத்தை கோருபவை.ஆனால் நண்பன் சொல்ல வந்த செய்தியை மனதில் பதிய வைத்த சினிமாவா? படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரியவில்லை.எத்தனை சினிமா விமர்சனம் இந்த பார்வையை கொண்டிருக்கிறது என்று வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.
சினிமா என்றில்லாமல் எந்த படைப்பும் சொல்லும் விதம்தான் மனதில் பதிய வைக்கிறது.நண்பன் இந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை.தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரச்சினை உண்டு.நல்ல கதையை தேர்வு செய்த பின்னரும் குழம்பித்தவிக்கும்.சி செண்டரில் ஓடாது இரண்டு ஃபைட் வேண்டும் என்பார்கள்.கவர்ச்சி இல்லையே என்று ஆலோசனை சொல்வார்கள்.நல்ல முயற்சிகள் சில வெற்றி பெற்ற பின்னரும்கூட இதுதான் நிலை.ரீமேக் படம் என்பதால் ரொம்ப யோசித்து நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் சங்கர்.வேறு நடிகர்கள் பொருந்துவார்களா என்பது சந்தேகம்.பலரையும் போலவே அந்த வறுமையை கேலி செய்த விதம் வருத்தமான விஷயம்.அதிகமும் அப்படியான ஏழைகளைக் கொண்ட இந்தியாவில் சமூக அச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
அடுத்து வேட்டை என்றொரு படம் வந்திருக்கிறது.அடுத்த நாட்களில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை நண்பர்கள் உருவாக்கினார்கள்.வழக்கமான லிங்குசாமியின் பரபரவிறுவிறு படம்.இம்மாதிரி படங்கள் வசூலாகித்தான் விடுகின்றன.சிறுவர்கள் பட்டம் அறுத்த பிரச்சினையில் சண்டை ஆரம்பிக்கும்போது விசில் சத்தம் காதைக் கிழித்துப்போனது.விஷயம் இருக்கிறதோ இல்லையோ யாராவது விசில் அடித்தால் பலரும் கிளம்பிவிடுவது தியேட்டரின் இயல்பு.மனதில் அடுத்தவனை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கிறது.அடிப்பது சந்தோஷமான விஷயம் ஆகிவிடுகிறது.ரௌடி,சவால் விடுவது,அடிதடி,மிரட்டல் இதெல்லாம் பார்த்த விஷயம்தானே என்றேன்.” பொழுது போச்சு இல்லையாடா?” என்றான் நண்பன்.சரிதான்.
நண்பனின் பொங்கல் வேட்டை.
Reviewed by haru
on
January 19, 2012
Rating:
No comments