சோர்வாக இருக்கிறதா?
சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது.இரவு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் கூட சோர்வு ஏற்படும்.கடுமையான உடல் உழைப்பு,அலைச்சலுக்கு பின்பு சோர்வு வர வாய்ப்பிருக்கிறது.உடல் நலக்குறைபாடுகளில் இப்படி இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு,மூச்சு வாங்குதல்,தோல் வெளுத்து காணப்படுதல் போன்றவை இருந்தால் ரத்த சோகையாக இருக்கலாம்.இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி சிரமப் படுகிறார்கள்.பிரசவம் தொடர்பான சிக்கல்களுக்கு ரத்த சோகை முக்கிய காரணமாக இருக்கிறது.
சுவாசித்தல் பணியில் பங்கேற்பது ஹீமோகுளோபின்.ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பதும்,கழிவை கொண்டுவருவதும் இதன் முக்கிய பணி.ஹீமோகுளோபின் குறைவையே ரத்தசோகை என்கிறோம்.உடல் இயக்கம் சீராக நடைபெறாமல் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறது.ஆண்களுக்கு 13.5 கிராமிற்கு மேலும்,பெண்களுக்கு 11.5 கிராமிற்கு மேலும் இருப்பது ஆரோக்கியமானது.ஆனால் பலருக்கு குறைவாகவே இருக்கிறது.குறிப்பாக பெண்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் கூட 10க்கு கீழ்தான் இருக்கிறது.
பரம்பரை உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும் சத்துக்குறைவு ஒரு முக்கிய காரணம்.இரும்புச்சத்து குறைபாடு,பி வைட்டமின் குறைபாடு போன்றவையே ரத்த சோகைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மட்டும் இரும்புச்சத்து,வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.மற்றவர்கள் இதைப்பற்றி தெரியாமலேயே இருந்துவிடுகிறார்கள்.அடிக்கடி சோர்ந்து போவதும்,உணவு காரணமாக கொஞ்சம் ஹீமோகுளோபின் கூடியதும் ஆறுதலாக உணர்வார்கள்.
விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.சரிவிகித உணவு இல்லாமல் இருப்பது நம்மிடையே சாதாரணம்.உணவை தேர்ந்தெடுக்க தெரியாமல் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்.இக்குறைபாட்டுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்.பலருக்கு இப்படி குறைபாடு இருப்பதே தெரியாது.இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.
கிடைக்கும் உணவை சாப்பிடும் பழக்கம்தான் நமக்கு உண்டு.அதிக சதவீத வறுமையும்,சத்துக்குறைவும் இன்னும் இந்தியாவில் பிரச்சினையாக இருக்கிறது.பெண்களின் கல்வியறிவு,ஊட்டச்சத்து பற்றிய அறிவும் குறைவாக இருக்கிறது.தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருக்கிறது என்பதே பலர் அறிவதில்லை.நல்ல உடல்நலத்திற்கு ஹீமோகுளோபின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும்.நாள்தோறும் உணவு,சமையல் பட்டியலில் இரும்புச்சத்து,ஃபோலிக் அமிலம்,வைட்டமின் போன்றவை நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பேரீச்சம்பழம்,வெல்லம்,இறைச்சி,பச்சை காய்கறிகள்,கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.சரியாக உடலில் சேர அஸ்கார்பிக் அமிலம் கொண்ட (விட்டமின் சி) உணவுப்பொருள்களையும் சாப்பிடவேண்டும்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு ,கொய்யா போன்றவை.சைவ உணவுப் பழக்கம் உடையவர்ளுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.ஆறு மாதம் ஒருமுறையாவது குடல்புழுக்களை அகற்ற சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை காபி,தேநீர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.இவை இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை உடலில் சேர்வதை தடுக்கின்றன.
சோர்வாக இருக்கிறதா?
Reviewed by haru
on
January 12, 2012
Rating:
No comments