குடும்ப வன்முறை.
குடும்ப வன்முறைக்கு சட்டம் வந்தபோது எதிர்க்குரல்களும் வந்தன.எத்தனை பேர் பயன் அடைந்திருப்பார்கள்? பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்று சொன்னார்கள்.ஆனால் சட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் பல்வேறு ஆய்வுகளை பின்னணியாக கொண்டிருக்கிறது.இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது.
எழுத்தறிவு வளரவளர பண்பும் வளர வேண்டும்.ஆனால் படிப்போ,மற்ற தகுதிகளோ இந்த விஷயத்தில் மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.குடும்ப வன்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது.ஏழை,பணக்காரன்,சாதி,மதம் எந்த வேறுபாடுகளும் இல்லை
.
.
குடும்ப வன்முறை எங்கெங்கும் நிறைந்திருந்தாலும் அதிகம் புகாராக வருவதில்லை.அதுவும் இந்தியாவில் மிகமிக குறைந்த அளவில் பதிவாகிறது.நம் நாட்டில் பெண்களுக்கு உடல் காயம் என்று ஏதாவது ஏற்பட்டால் கணவன்,அவனைச் சார்ந்தவர்களின் சித்தரவதை காரணமாக இருக்கிறது.இங்கே மனைவியை அடிப்பதே வீரம்.
கணவன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று உலகம் சொல்கிறது.எதிர்த்து பேசினால் வாயாடி என்பார்கள்.வெளியில் சொன்னால் குடும்ப மானத்தை கெடுக்கும் பாவி.குழந்தைகள் ஆன பின்னால் அவர்களுக்காகவாவது பொறுத்துக் கொள்ள வேண்டும். தாய் வீட்டிலும் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
மகள் அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டமான விஷயம்.ஆனாலும் மண உறவை முறித்துக் கொண்டு வீடு திரும்புவதை பெற்றோர் விரும்புவதில்லை.நம்முடைய காலத்துக்குப் பின் தனியாளாகி என்ன செய்வாள் என்ற எண்ணம் ஒரு காரணம்.இல்லாவிட்டால் அடுத்தபெண்ணின் திருமணம் பாதிக்கப்படும் என்ற பயமும் இருக்கும்.
மகளின் நிலையை எண்ணி பெற்ற தாய் அழுவாள்.அவளுக்கு மிக கஷ்டமான விஷயம்.கோயிலுக்கு நேர்ந்து கொள்வாள்.ஜோதிடம் பார்க்க போவாள்.கூடப் பிறந்த அண்ணன் தம்பியிடம் சொல்லி அழலாம்.மகளை அழைத்து வேதனையுடன் அம்மா சொல்கிறார்,ஆண்கள் அப்படித்தான்,போகப் போக சரியாகப் போய்விடும்.இப்போது உனக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை.
வாழாவெட்டி என்றொரு வார்த்தை இருக்கிறது.பெண்கள் நினைத்தாலே நடுங்கும் வார்த்தை அது.ஏளனம்,பாதுகாப்பின்மை,ஒதுக்குதல் இன்னும் கொடூர எண்ணங்களை உற்பத்தி செய்யும் வார்த்தை அது.முதல் பெண்ணே வாழாவெட்டி,அதனால் அந்த குடும்பத்தில் பெண் வேண்டாம் என்பார்கள்.
சரிதான்.பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா? இல்லையென்று நான் சொல்லவில்லை.அதற்கும் நிவாரணம் தேவைதான்.ஆனால் பெண்களுக்கு நேரும் வன்முறைகளுடன் ஒப்பிட முடியாது.சிகரெட் நெருப்பால் உடலை சுடும் பெண்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி என்றும் பாராமல் போதையில் எட்டி உதைப்பது போன்று பெண்களின் செயலை ஒப்பிட முடியுமா?
குடும்ப வன்முறை.
Reviewed by haru
on
January 04, 2012
Rating:
Reviewed by haru
on
January 04, 2012
Rating:





No comments