எமன் அலையும் சாலைகள்.
சாலை விபத்துக்களுக்கு தனிக் குணம் உண்டு.அநியாய மரணம் என்பார்கள்.கேள்விப்படும் அனைவரிடமும் அதிர்ச்சியை உருவாக்கும்.பலர் கேள்விப்பட்டிருப்பார்கள்.சில விபத்துக்களை நேரில் பார்த்திருப்பார்கள்.நான் பார்த்த விபத்துக்கள் எத்தனை இருக்கும் என்று நினைவில் இல்லை.இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமர்ந்திருக்கிறது எங்கள் கிராமம்.நாளிதழ் படிக்க தினமும் நெடுஞ்சாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வரவேண்டும்.
ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும் சாலை.பல மாநிலத்து வாகனங்களும் இருக்கும்.விபத்துகளும் பலவகைப் பட்டதாக இருக்கும்.சின்னஞ்சிறு குழந்தை முதல் ஒரே நேரத்தில் குடும்பமாக இருபது பேர் பலியான விபத்து வரை நேரில் பார்த்திருக்கிறேன்.என்னுடைய நெருங்கிய நண்பர்களை விபத்தில் பறி கொடுத்த கொடூர சம்பவங்களை சந்தித்ததுண்டு.கால் மட்டும் தனியாக,முகம் சிதைந்து தலை நசுங்கி,சதைத்துண்டுகளாக என்று இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது.
ஏராளமான விபத்துகளை நேரில் கண்ட அனுபவத்திலிருந்து அதற்கான காரணங்களையும் விவாதிப்பார்கள்.வேகமாக செல்லும் ஒரு லாரியிலிருந்து தம்ளர் ஒன்று கீழே விழுந்து விட்டது.கிளீனர் ஏதாவது சாப்பிட்டுவிட்டு கையை கழுவியிருக்க வேண்டும்.தம்ளர் விழுந்துவிட்டது என்று பிரேக் போட,அடுத்து வந்து கொண்டிருந்த லாரி வேகமாக மோதியது.நசுங்கிப்போயிருந்த உடல்களை சிரமப்பட்டு வெளியே எடுத்தார்கள்.
நண்பர் ஒருவர் நகரப் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்புறம் போனார்.வேகமாக வந்த லாரியை கவனிக்கவில்லை.அவரது முகத்தை பார்க்க முடியவில்லை.எதுவும் மிஞ்சவில்லை.சாலையிலேயே போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.கவனக்குறைவால் நேர்ந்த விபத்து.புத்தாண்டு நள்ளிரவு கேக் வெட்ட தயாராக இருந்தோம்.திடீர் சத்தம் ஒன்று உலுக்கியது.அருகே போய் பார்த்தால் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தார்.குடித்திருந்தார்.பேச்சு குளறிக் கொண்டிருந்தது.
சென்ற மாதம் நகரில் திடீரென்று மாடு குறுக்கே வந்து விட்டது.மாட்டின் மீது மோதாமல் இருக்க முயன்று கீழே விழுந்தார்.திருப்பத்தில் நல்ல வாகன ஓட்டிகள் சிலர் ஹாரன் கொடுப்பார்கள்.மாடுகளுக்கு அப்படி சத்தம் எழுப்ப ஏதாவது வழியிருக்கிறதா தெரியவில்லை.செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதையும் நேரில் பார்த்தேன்.இரண்டு நண்பர்கள் ஒரே இடத்தில் பலியானார்கள்.இன்னமும் சாலைகளில் செல்போனை காதில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
த்ரில்லிங் என்று வேகம் கூட்டி விளையாடுபவர்களை பார்க்கிறேன்.விதிகளை காற்றில் பறக்கவிட்டு அலைபவர்களை பார்க்கிறேன்.நேருக்கு நேராக வாகனங்கள் மோதிக் கொள்வதை பார்த்துவிட்டு சிலர் சொன்னார்கள்.''நான்கு வழி சாலை வந்தால் விபத்துக்கள் குறைந்துவிடும்.'' அப்படியொன்றும் குறையவில்லை.அகன்ற சாலைகள் எமனுக்கும் பிடித்திருக்கிறது.
எமன் அலையும் சாலைகள்.
Reviewed by haru
on
January 05, 2012
Rating:
No comments