நெல்லிக்கனி-சி வைட்டமின் -திரிபலா
ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் குறித்த அச்சம் நிலவுகிறது.இது குறித்த விரிவானபதிவை இத்தளத்தின் வாசகர்கள் ஏற்கனவே படித்திருக்க வாய்ப்புண்டு.படிக்காதவர்கள் சுட்டியை அழுத்திப் படிக்கவும்.மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா உஷார்!புதிய ஆய்வு முடிவு ஒன்றை படித்தேன்.தற்போதுள்ள காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களை சி வைட்டமின் அழித்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.இதே வைட்டமின் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செல் சிதைவை தடுக்கிறது என்று சென்ற பதிவில் பார்த்தோம்.
ஆயிரம் மில்லிகிராம் வரை உணவில் சேர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.ஆனால் தினமும் மாத்திரைகளாக உண்பதை பலரும் ஆதரிக்கவில்லை.உணவு மூலம் அதிக அளவு சி வைட்டமினை பெறுவது இன்று நமக்கு முக்கியமான சவால்.உணவின் மூலம் குறைந்த செலவில் எப்படி பெறுவது? என்று ஒருவர் கேட்டார்.எலுமிச்சை விலை குறைவுதான்.மேலும் இதைப்பற்றிய சிந்தனையின் போது எனக்கு நினைவுக்கு வந்தவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார்.
அதியமான் வள்ளலான கதை நமக்குத்தெரியும்.தமிழ் மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமென்று நினைத்திருக்கவேண்டும்.தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைக்குக் கொடுத்து வரலாற்றில் நீங்காத இடம் பெற்றான்.எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டரில் இருக்கிறது அதியமான்கோட்டை என்ற ஊர்.தமிழக அரசால் அதியமான்கோட்டம் கட்டப்பட்டுள்ளது.அவ்வை பெற்ற நெல்லிக்கனிக்கு மட்டுமல்ல! அனைத்து நெல்லிக்கனிக்கும் நீடித்த வாழ்வைத்தரும் ஆற்றல் உண்டு என்பதே நிஜம்.உயிர்ச்சத்து சி ஆரஞ்சுப்பழத்தை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கிறது.ஆரஞ்சு அளவுக்கு பணம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை.இந்திய மருத்துவத்தில் நெல்லிக்காய் தொடர்ந்து சிறப்பிடம் பெற்றிருக்கிறது.ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் ச்யவன்பிராஷ்,நெல்லிக்காய் லேகியங்கள் புகழ்பெற்றவை.சுவை காரணமாக நெல்லிக்காய் அதிகம் பயன்பாட்டில் இல்லை.ஊறுகாயாக,மருந்தாக மட்டுமே இருந்துகொண்டிருக்கிறது
.
உப்பு,காரம் சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானது.பழச்சாறாக சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.முக்கியத்துவம் தெரிந்தவர்கள் உலர் நெல்லிக்கனியை மென்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.கடைகளில் எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும்.உலர்ந்தபின்பும் அதில் உள்ள சத்துக்களில் மாற்றம் இல்லை என்கிறார்கள்.சூயிங்கம் போன்றவற்றை மெல்லுவதை விட இதில் ஏராள நன்மைகள் உண்டு.தூள் செய்யப்பட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இளமையை மீட்டெடுக்கும் கனியாக நெல்லிக்கனி தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.முடியும் தோலும் இதனால் வளம் பெறுகின்றன.மேலும் கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்த,இதயத்தை,கல்லீரலை பாதுகாக்க என்று நன்மைகள் ஏராளம்.ஆரஞ்சு போன்ற பழங்களை ஒப்பிடும்போது குறைந்த விலையில் அதிக சி வைட்டமினை நெல்லிக்காய் மூலம் பெறலாம்.
சென்றவாரம் நண்பன் ஒருவனை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய் சேர்த்து ஒருவர் தூளாக்கித் தருவதாகவும்,தினமும் பயன்படுத்துவதாக சொன்னான்.திரிபலா என்ற பெயரை அவன் கேள்விப்பட்டிருக்கவில்லை. மாதம் ஐம்பது ரூபாய் செலவாகிறது என்றான்.உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சொன்னான்.குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை போக்கும் மருந்தாக ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் தரப்படுகிறது.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதாக படித்திருக்கிறேன்.
நெல்லிக்கனி-சி வைட்டமின் -திரிபலா
Reviewed by haru
on
June 06, 2013
Rating:
No comments