முளை கட்டிய உணவுகள்.
தானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு முளைகட்டி வைத்திருந்தார்கள்.விரும்பி போட்டுக்கொண்டு சாப்பிட்டவர்கள் ரொம்பக்குறைவு.குழம்பில் எப்போதும் எனக்குப் பிடித்தமானது பச்சைப்பயறுதான்.அதன் சுவைக்கு நான் அடிமையும் கூட! முளைகட்டிய பயறு ருசியாக இல்லாவிட்டாலும் சந்தோஷமாக சாப்பிட்டேன்.
சுவைக்கு முக்கியத்துவம் அளிப்பது நம்முடைய பண்பாடல்ல! ஆரோக்கியத்தை நோக்கமாக வைத்தே உணவுப் பழக்கங்கள் இருந்தன.வெயில் காலங்களில் குழம்பில் புளியைக் கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள்.சுவை குறைந்தாலும் சீக்கிரம் கெட்டுப்போகாது.உழைக்கும் மக்கள் மதியம் ஒரு முறை சமைப்பது சாத்தியமல்ல.காலையில் தயாரித்த உணவு மாலைவரை வரவேண்டும்.
சுவையாகவும் மேலும்மேலும் சாப்பிட்த்தூண்டும் முளைகட்டிய தான்யம் ஒன்று உண்டு.கம்பு முளைகட்டி சாப்பிட்டவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.அதே போல கம்பு அடையும் அத்தனை சுவை.எளிதில் தயாரித்துவிடலாம்.இதெல்லாம் அதிகம் உழைப்பு தேவைப்படாத தின்பண்டம்.ஆனால் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் இதன் பங்கு மகத்தானது.
இன்று வீட்டில் போதுமான நேரம் இருப்பதில்லை.கணவன்,மனைவி இரண்டு பேரும் சம்பாதிக்க ஓட வேண்டியிருக்கிறது.இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்துக்கு முக்கிய காரணம் இதுதான்.ஆனால் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கும்,உணவகங்களை நம்பி இருப்பவர்களுக்கும் முளைகட்டிய தானியங்கள் வரப்பிரசாதம்.
தானியத்தை பகல் முழுக்க ஊறவைத்து நீரை வடித்துவிட்டு சுத்தமான துணியில் கட்டி வைக்கவேண்டும்.முளை வந்த பிறகு சாப்பிடலாம்.கம்புக்கு சுவைக்காக வேறு எதுவும் தேவைப்படாது.பச்சைப்பயறு போன்றவற்றோடு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.முளைகட்டிய பயறுகளை காயவைத்து உடைத்து சாம்பாருக்கு பயன்படுத்துவதும் உண்டு.
முளை கட்டிய தானியங்கள் அவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்களை அதிகப்படுத்தித் தருகின்றன.விட்டமின் சி,இ,பீட்டாகரோட்டின் போன்றவை தினசரி உயிர்ச்சத்து தேவையை உறுதிசெய்யும்.உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸிடெண்டுகளைப்பெற முடியும்.இன்றைய கதிர்வீச்சு,மாசு,தரமற்ற உணவுகள் போன்றவற்றால் ஏற்படும் செல் சிதைவிலிருந்து தடுத்து புற்றுநோய், இதயநோய் ஆபத்தைக் குறைக்க உதவும்.
உடலின் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான நொதிகளையும் முளைகட்டிய உணவின் மூலம் பெறலாம்.நார்ச்சத்து,அவசியமான கொழுப்பு அமிலங்கள்,புரதங்களைத் தருகிறது.நீடித்த இளமை,உறுதியான ஆரோக்கியம் மிக எளிய முறையில்,குறைந்த செலவில் கிடைக்கிறது.முயற்சி செய்து பார்த்தால் வித்தியாசத்தை உணரமுடியும்.
முளை கட்டிய உணவுகள்.
Reviewed by haru
on
September 17, 2013
Rating:
No comments