சுங்கச்சாவடியை ஏமாற்ற பயணிகளை வதைப்பதா?
வேலூரிலிருந்து ஓசூர் போகும் பேருந்து அது.பேருந்தின் நடத்துனர் விறைப்பாக சொல்லிக்கொண்டிருந்தார்."நாட்றம்பள்ளி பஸ் ஸ்டாண்டுக்குள்ள போகாது.பைபாஸ் இறங்கிக்கனும் ".சிலர் கேட்டுவிட்டு போய்விட்டார்கள்.பைபாஸில் இறங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஏறிக்கொண்டார்கள்.அடுத்து ஒருவர் "பர்கூர் போகுமா?" என்று கேட்டார்."பைபாஸ் மட்டும்தான்" என்றார் நடத்துனர்.அவரும் அரைமனதுடன் ஏறிக்கொண்டார்.
பேருந்து அவ்வளவு வேகமில்லை.வாணியம்பாடிக்குப் பிறகு கொஞ்ச தூரத்தில் பேருந்து நெடுஞ்சாலையை விட்டு பாதை மாறிப் பயணித்தது.பயணிகளுக்கு காரணம் புரியவில்லை.சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்ப்பதற்காக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.உறுதியாக யாரும் சொல்லவில்லை.நூறு ரூபாய்க்காக அல்லது அற்ப விஷயங்களுக்காக பாதை மாறுபவர்களை நினைத்துக்கொண்டேன்.
ஒட்டுனருக்குப் பாதை பழக்கமில்லாமல் இருக்கவேண்டும்.திருப்பத்தூர் செல்லும் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.பயணிகள் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.பயணி ஒருவர் நாட்றம்பள்ளி இறங்க வேண்டியவர்.ஓட்டுனரிடம் சென்று வழி காட்ட ஆரம்பித்தார்."ரைட்ல போங்க! லெப்ட்ல போங்க!" என்ற சத்தம் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தது.
நிறுத்துங்க என்றபோது பேருந்து நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் கொண்டிருந்தது.முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்.நான் நடத்துனரைப் பார்த்தேன்.பாவமாக நின்று கொண்டிருந்தார்.பயணிகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.வீடுகளில் இருந்து அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டது.பின் இருக்கையில் இருந்தவர் எரிச்சலில் மனைவிமீது கோபத்தைக் காட்டினார்."வைடி போன! நீ ஒரு தொல்லை! இந்த டிரைவர் ஒரு தொல்லை!".
கல்லூரி மாணவிகள் சிலபேர் இருந்தார்கள்.பேருந்து நிலையத்தில் காத்திருந்த தந்தையோ,அண்ணனோ தொடர்ந்து போனில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.வீட்டிலிருந்து அம்மாக்கள் காரணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.இரவு பத்துமணியை தாண்டி விட்டது.கிராமத்துக்குச் செல்லும் பேருந்து போய்விட்டிருக்கும் என்று ஒருவர் புலம்பினார்.
கிட்டத்தட்ட பேருந்து ஒருமணி நேரம் தாமதமாகி விட்டது.பர்கூர்க் காரர் "லெப்ட்ல போங்க" என்றார்.பேருந்து பர்கூரில் பொறுமையாக நின்று கிளம்பியது.அற்பமான லாபத்துக்காக மற்றவர்களை வதைப்பதை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.சக மனிதர்களை அவர்கள் சிரமப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சுங்கச்சாவடியை ஏமாற்ற பயணிகளை வதைப்பதா?
Reviewed by haru
on
December 01, 2013
Rating:
Reviewed by haru
on
December 01, 2013
Rating:





No comments