மனிதர்கள் தனிமையால் கெட்டுப்போவார்களா?
எழுத்தாளர் சுஜாதாதான் என்று நினைக்கிறேன்.தனித்து,விழித்து,பசித்து இருந்தால்? என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சுஜாதாவின் பதில்-டெத்து.விவேகானந்தருடையது ஆன்மீக சமாச்சாரம்.தனிமையில்தான் ஞானம் தோன்றமுடியும் என்று சொல்வார்கள்.பாரதியும் கூட தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா! என்று பாடினார்.
தனிமை ஒழுக்கக்கேட்டை வளர்க்கும் என்பதும் நிஜம்தான்.நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது.தனிமை ஒருவரை அறிவாளியாக்கலாம்.கெட்டுப்போகவும் செய்யலாம்.குடும்பத்தினர் உள்ளிட்ட யாருடைய கண்காணிப்பும் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? ஒருவர் தீய பழக்கங்களுக்கு ஆளாவதற்கு சாத்தியங்கள் அதிகம்.
தனிமைப்படுத்துவது பொதுவாக தண்டனையாகக் கருதப்படுகிறது.ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கும் பஞ்சாயத்துகள் உண்டு.இது ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக இருக்கும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்துவது ஒருவரை வழிக்குக் கொண்டுவருவதற்கான வழி!பருவ வயதில் தனிமை ஆபத்தான காரணியாகவே பார்க்கப்படுகிறது.
தனிமையில் இருக்கும் பெண் அதிகம் தொல்லையை சந்திக்கக்கூடும்.முதியவர்களுக்குத் தனிமை கொடுமையானது.கிட்டத்தட்ட நெருப்பில் இருப்பது போன்ற அனுபவம்தான்.ஆனாலும் நெருப்பில் வலிமையானது மேலும் உறுதிபெற்று வெளியே வருகிறது.மற்றவை வீழ்ந்து கருகிப்போய்விடுகிறது.
தனிமை சிலருக்கு வரமாகவும் பலருக்கு சாபமாகவும் இருக்கிறது.தனிமையில்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன்.அதிகம் சிந்தித்தும் இருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் எப்போதாவது கொஞ்சம் தனிமை தேவைப்படத்தான் செய்கிறது.அப்போது நல்ல இசையைக் கேட்டு ரசிக்கமுடியும்.கண்மூடி அமைதியாக தியானிக்கமுடியும்.
தனிமை என்பது கடந்துசெல்லக் கஷ்டமான நெருப்பாறுதான்.ஆனால் கலை,இலக்கியங்களோடு உறவாடும்போது மதிப்பு பெற்றுவிடுகிறது.நல்ல இசையோ,புத்தகமோ அருகில் இருக்கும்போது அற்புத அனுபவமாகிவிடுகிறது.மனிதன் துன்பங்களைத் தாங்கி முன்னேறவும்,வலியில்லாமல் கடந்து செல்லவும் கலையும்,இலக்கியமும் உதவும்.
மனிதர்கள் தனிமையால் கெட்டுப்போவார்களா?
Reviewed by haru
on
December 03, 2013
Rating:
Reviewed by haru
on
December 03, 2013
Rating:





No comments