இரத்தப்பரிசோதனை-அறியாத உண்மைகள்.
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் இரத்தப்பரிசோதனைக்கு பரிந்துரைப்பதுண்டு.சில தினங்களாக காய்ச்சல் எனும்போது டைபாய்டு பரிசோதனை அவசியம்.மலேரியா பரிசோதனைக்கும் எழுதிக்கொடுக்கலாம்.நாம் சொல்லும் அறிகுறிகளை வைத்து தீர்மானிப்பார்கள்.சில இடங்களில் மருத்துவர்களைவிட இரத்தப்பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் காலையிலேயே வரிசையில் நிற்பார்கள்.அவர்களுக்கு சாப்பிடும்முன்பும் பின்பும் சோதனை செய்யவேண்டும்.வீடுகளுக்கே நேரில் வந்து இரத்தமாதிரி சேகரித்துச்செல்லும் மையங்களும் இருக்கின்றன.பொதுவாக பணத்திற்காக (கமிஷன்) டெஸ்டுகளை எழுதுகிறார்கள் என்று குற்றச்சாட்டும் இருக்கிறது.ஆனால் எதிர்பாராவிதமாக அறிகுறியற்ற நோயோ,குறைபாடோ கண்டறியப்பட்டதும் உண்டு.
ஒருவர் இரத்தப்பரிசோதனை மையம் வைத்திருந்தார்.அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை.வசதியில்லாத ஒரு பையனைப் பிடித்து இரத்தம் எடுக்கக் கற்றுக்கொடுத்துவிட்டார்.பரிசோதனை செய்ய யாராவது வந்தால் போன் வரும்.வந்தவருக்கு என்ன அறிகுறி இருக்கிறதென்று கேட்கச் சொல்வார்.இரத்தம் மட்டும் எடுப்பானே தவிர சோதனை செய்யத்தெரியாது.
முதலாளி போனிலேயே சொல்லிவிடுவார்.ஒருமணிநேரம் கழித்து வரச்சொல்லி பையன் முடிவை எழுதிக்கொடுத்துவிடுவான்.இருக்கவேண்டிய அளவு தெரிந்தால் போதுமானது.சில இடங்களில் பரிசோதனை செய்ய சோம்பேறித்தனம் வந்துவிடும்.நார்மலாக இருப்பதாக எழுதிக் கொடுப்பார்கள்.பரிசோதனை செய்ய வசதி இருக்காது.இருந்தாலும் அதற்கான பணம் மிச்சமாகிவிடும்.
ஒருவருக்கு கடுமையான இரத்தசோகை அறிகுறி கண்டு மருத்துவர் பரிந்துரை செய்தார்.ஹீமோகுளோபின் பரிசோதனைக்கு அனுப்பினால் நார்மல் என்று முடிவு கொடுத்தார்கள்.மருத்துவரால் நம்ப முடியவில்லை.அவரே நேரில் சென்று தன் முன்னால் பரிசோதனை செய்யுமாறு சொன்னார்.மூன்று கிராம் க்கு கீழேஇருந்தது.அவசியம் இரத்தம் ஏற்றாவிட்டால் ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும்.
தைராய்டு உள்ளிட்ட சில பரிசோதனைகள் உள்ளூரில் இருக்காது.வெளியில் நகரங்களுக்கு அனுப்பி முடிவைப்பெறவேண்டும்.அதற்கான பரிசோதனை செலவும் அதிகம்.சில நாட்கள் கழித்து இவர்களாகவே முடிவைக்கொடுப்பார்கள்.மின்னஞ்சலில் பெற்றதாக சொல்லிக் கொள்வார்கள்.பெயரளவில் உபகரணங்களை வைத்து செயல்படும் மையங்கள் இருக்கின்றன.காலாவதியான ரசாயனங்களைத் தூக்கி எறிய மனமில்லாமல் பயன்படுத்துபவர்கள் உண்டு.
சிலர் மருத்துவரிடம் செல்லாமலே இரத்தப்பரிசோதனைக்கு போய் நிற்பார்கள்.எச்.ஐ.வி போன்ற பரிசோதனைக்கு இது சரியான முடிவு.ஆனால் அரசு மருத்துவமனைக்குச்செல்லவேண்டும்.முறையற்ற வணிக நடைமுறைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.உயிர் காக்கும் விஷயமும் இதில் விதிவிலக்கல்ல! கொடுக்கும் பணத்திற்கு ரசீது கேட்டுப்பெறவேண்டும்.சில நிகழ்வுகளில் வழக்குத்தொடர கட்டாயம் தேவைப்படும்.யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் மிகவும் நல்லது.
இரத்தப்பரிசோதனை-அறியாத உண்மைகள்.
Reviewed by haru
on
December 08, 2013
Rating:
Reviewed by haru
on
December 08, 2013
Rating:





No comments