கோதுமை பிரெட்-உணவும் விழிப்புணர்வும்

Ads Below The Title

வகுப்புத்தோழனை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.இம்மாதிரி நேரங்களில் தேநீராவது குடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது.அடுமனை(பேக்கரி) ஒன்றுக்குள்நுழைந்தபோது ஒரு அறிவிப்பைக்கவனித்தேன்.கோதுமை பிரெட் இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு சொன்னது.பலர் தற்போது கேட்பதால் தயாரிக்க ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள்.மைதா பற்றிய விழிப்புணர்வின் அடையாளமாக இதைக்கருதலாம்.


இன்றைய விளம்பர உலகில் விழிப்புணர்வு மூலமாகத்தான் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.இணையதளங்கள்,வார,மாத இதழ்கள்,நாளிதழ்கள் உள்பட மைதா குறித்த தகவல்கள் வெளிவந்தன.பாரம்பரிய உணவுகள் குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.கேழ்வரகு பணக்காரர்களின் உணவாக மாறிவருவதாக தினத்தந்தியில் படித்தேன்.கூழ் தயாரிப்பது பற்றி ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஓட்ஸ் பற்றிய பதிவில் கேழ்வரகு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.கேழ்வரகுக் கூழ் நம்முடைய கலாச்சாரமாக இருந்து வந்திருக்கிறது.வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது கேழ்வரகுக்கூழ்தான்.சோளத்தை இடித்து நொதிக்கவைத்து தயாரிப்பார்கள்.ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோளம் கலக்காத கூழ் தருவார்கள்.குடித்தவுடன் உடல்நலம் மேம்பட்டுவிட்டதாகத் தோன்றும்.


கொதிக்கும் நீரில் கேழ்வரகு மாவை சிறிதுசிறிதாக கொட்டி கிளறினால் கூழ் தயாராகிவிடும்.கொங்கு மண்டலத்தில் குழந்தைகளின் இணைஉணவு இந்தக்கூழ்தான்.இரும்புச்சத்து,கால்சியம் போன்றவை உடல்பலத்தை உறுதிசெய்யும்.நம்முடைய பாரம்பர்ய உணவுகளே நமக்குப் போதுமானவை.இந்தியாவில் மட்டுமல்ல! உலகின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைக்கு இவை வழி சொல்லும்.

பேருந்து நிலையங்கள்,சாலைகள் என்று ஏராளமான இடங்களில் கூழ் விற்பனையாகிறது.ஆனால் சுகாதாரமானதா என்பது சந்தேகம்.கலக்கப்படும் நீரும்,கடித்துக்கொள்ள மிளகாய்த்தூள் தடவி ஏதாவது வைத்திருப்பார்கள்.திறந்தவெளியில்தூசுகள் படிந்திருக்கும். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் இது.காலாவதியான குளிர்பானத்தைக் குடித்து மாணவர்கள் மயங்கினார்கள்.நாம் இன்னும் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கக் கூட கற்றுத்தரவில்லை.


நம்முடைய தாத்தா,பாட்டியெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பியதில்லை.அப்போது கிரைண்டர் கிடையாது,ஹோட்டலில் மாவு அரைப்பவர்கள் வெற்றிலைபாக்கு போட்டால் அடிக்கடி எழுந்து வெளியில் போகமுடியாது. எச்சிலை மாவிலேயே துப்பிவிடுவார்கள் என்று சொல்வார்கள்.இன்று ஹோட்டலில் சாப்பிடுவது சாதாரணமாகிவிட்டது.நல்ல உணவகங்களும் இருக்கின்றன.

ஆயா கடையில் இட்லி வாங்க வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துப்போவார்கள்.இன்று பிளாஸ்டி பையில் சாம்பாரும்,குருமாவும் கட்டித்தருகிறார்கள்.பிளாஸ்டிக் சூடான உணவுப்பொருளுடன் வினைபுரிந்து புற்றுநோய் ஆபத்தைத்தரும்.உணவைத்தேர்ந்தெடுத்தல்,தயாரித்தல்,எடுத்துச்செல்லுதல்,பாதுகாத்தல், போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.இவ்விஷயத்தில் அறிவும்,விழிப்புணர்வும் நமக்கு அவசியம் தேவை.
கோதுமை பிரெட்-உணவும் விழிப்புணர்வும் கோதுமை பிரெட்-உணவும் விழிப்புணர்வும் Reviewed by haru on December 05, 2013 Rating: 5

No comments