குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வு
பாம்பு பழிவாங்கும் கட்டுக்கதையைக் கிராமத்தில் சொல்வார்கள்.பாம்பை உயிர்போகும்வரை அடிக்காமல் விட்டுவிட்டால் தேடிவந்து பழிதீர்க்கும் என்பார்கள்.அதுவும் கொம்பேறிமூக்கன் என்ற பாம்பு தன்னை அடித்த மனிதனை கடித்து உயிரைப்போக்கிய பிறகு சுடுகாட்டு மரத்தின் மீது ஏறி இறுதிச்சடங்கை பார்த்தபின்னர்தான் ஆத்திரம் தீரும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பழிதீர்க்கும் மனிதர்களைப் பாம்பு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
அரிஸ்டாடில் மனிதன் சமூக விலங்கு என்று சொன்னார்.அரசியல் மிருகம் என்று குறிப்பிட்டார்.சமூக வாழ்விலும் அரசியலிலும் பழி வாங்கும் உணர்வே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.எப்போதும் மனிதன் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறான்.திரைப்படங்களில் பழிவாங்கும் கதைகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.வஞ்சம் தீர்ப்பது அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.மனிதன் பழிதீர்க்கும் மிருகம் என்று சொல்லலாம்.
சிறுவயதில் நடந்த அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.போதையேறிய ஆசாமி ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை தரக்குறைவாகப் பேசிவிட்டார்.அப்படிப்பேசிய இடம் அவர் வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.அவருக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் வீட்டு வாசலில் இருந்தே பேசியிருக்கலாம்.ஆனால் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று அவர் பேசிய இடத்திலேயே பேசி விட்டுவந்தார்.
நம்முடைய இதிகாசங்களிலும் இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.ராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது கூனியின் பழிதீர்த்தல்தான்.பாஞ்சாலியும் பழிதீர்த்துக்கொண்டார். நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.``இந்த மாவட்டத்துக்கு உயரதிகாரியாக வரவேண்டுமென்று`` ஒருவர் விருப்பப்பட்டதாகச்சொன்னார்.அவர் குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மானம் போய்விட்டது.அதே இடத்தில் உயர் அதிகாரியாக வருவதன் மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்
.
தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.திருமண வாழ்வில் ஆறாண்டுகள் கடந்துவிட்டார்கள்.ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள்.திருமணத்தின்போது தனது தந்தையை விமர்சனம் செய்தது முதல் மனைவி சொல்ல ஆரம்பித்தார்.அவமானம்,தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.
குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளிலும் பழிவாங்கும் உணர்வு வலிமையாக இருக்கிறது.அண்டை அயலார்கள்,இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் இது பொருந்தும்.கணவன்,மனைவி என்றில்லாமல் அனைவரும் பழி உணர்வை கையாளக்கற்றுக்கொள்வது அமைதிக்கு வழிவகுக்கும்.அவனை ஏதாவதுசெய்தே தீருவேன் என்று சிந்திக்கும் நேரத்தில் வளர்ச்சி குறித்த எண்ணங்களை உருவாக்கலாம்.
உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்குப்போகவேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் அழைத்திருந்தார்கள்.``நம்முடைய நிகழ்வுகளுக்கு வராமல் அவர்கள் புறக்கணித்தார்கள்.அதனால் நாம் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்`` என்பது வீட்டில் உள்ளவர்களது வாதம்.நான் சொன்னேன்,``நான் அவர்களைப் பின்பற்ற முடியாது.`` ஆமாம்,நாமும் அவர்களைப்போலத் தரமின்றி நடந்து கொள்ளவேண்டாம்.
குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வு
Reviewed by haru
on
July 14, 2014
Rating:
Reviewed by haru
on
July 14, 2014
Rating:





No comments