உயிரற்ற உறவுகள்
விலைமாதர் உறவைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும்போது``இருட்டறையில் பிணத்தை அணைப்பது போல`` என்கிறார்.பெண்ணை உடலாக மட்டுமே கருதும் அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.சக மனிதர்களுக்கிடையேயான அன்பு,அக்கறை,பரிவு போன்றவை இங்கே இல்லை.ஆதாயத்துக்காக மட்டுமேயான உறவுகள் இன்று அதிகரித்து வருகின்றன.
கிராமங்களில் வேற்று சாதியாக இருந்தாலும் உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்க்கலாம்.ஊரில் பலரை எனக்கு மாமா,அண்ணா,பெரியப்பா,அத்தை என்று சொல்லித்தான் பழக்கம்.உணர்வுப்பூர்வமாக உதவிசெய்வது,ஆபத்தில் உடன் நிற்பது என்று நெருக்கமான உறவுகள் அவை.நுகர்வுக் கலாச்சாரம் இன்று அவற்றையெல்லாம் அழித்துவிட்டது.
பணியிடம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது.செய்யும் வேலை மூலமாக வரும் வருமானம்தான் அத்தனையும் தீர்மானிக்கிறது.விழித்திருக்கும் அதிக நேரங்கள் பணியிடத்தில் இருக்கிறார்கள். அலுவலக சந்தோஷமும்,சங்கடங்களும் வீட்டில் எதிரொலிக்கிறது.பணியாளரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற இடம் அது.
திங்கட்கிழமை காய்ச்சல் என்று சொல்கிறார்கள்.பலருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுப்பு முடிந்து அடுத்தநாள் வேலைக்குச்செல்ல சங்கடமாக இருக்கிறது.பத்து மணி வேலைக்குச் சரியான நேரத்துக்கு வருவதைப் பலர் விரும்புவதில்லை.தாமதமாக வருவதில் பெருமை கொள்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அடிப்படையில் மனிதமனம் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.
பணியிடத்தின் அரசியல்களை இவற்றுக்குக் காரணமாகச் சொல்லலாம்.வேலை தெரியாதவர்களும்,வேலை தெரிந்த சோம்பேறிகளும்,மனக்கோளாறு உள்ளவர்களும் இந்த அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள்.இவர்கள் அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.வீட்டுவேலை செய்கிறார்கள்.போட்டுக்கொடுக்கிறார்கள்.பல நேரங்களில் பொய் பேசுகிறார்கள்.
மிகச் சிரமப்பட்டுப் படித்து பணியில் சேர்ந்த நண்பர் ஒருவரை நீண்டகாலத்துக்குப்பின்சந்தித்தேன்.உருக்குலைந்துப்போயிருந்தார்.வேலையில் திருப்தியில்லை என்று சொன்னார்.தகுதியில்லாதவர்கள் முதன்மை பெறுவது மதிப்பீடுகளைச் சிதைத்து விடுகிறது.எளிய மனிதர்கள் சமாளிக்க முடியாத மன அழுத்தத்தை சுமக்கவேண்டியிருக்கிறது.
அலுவலக அரசியல் குடும்ப உறவுகளில் எதிரொலிக்கிறது.ரத்த அழுத்தம்,நீரிழிவு,இதயநோய் உள்ளிட்ட நோய்களைக் கொண்டுவருகிறது.அலுவலகத்தில் உருவான உணர்ச்சிக்கொந்தளிப்பு மனைவி,குழந்தைகள்,பெற்றோர்களிடம் வீசப்படலாம்.பசி முதல் பாலியல் விருப்பங்கள் வரை மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
யாரைத்தான் நம்புவது? என்ற வார்த்தைகளைப் பணிச்சூழலில் அடிக்கடி கேட்கிறேன்.தனிப்பட்ட,குடும்ப விஷயங்களை அலுவலக சூழலில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத மோசமான சூழல் இன்று உருவாகியிருக்கிறது.முன்னெப்போதையும் விட உளவியல் ஆலோசகர்களின் தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும்.
பணிச்சூழல் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு பெறுவதுதான் முதல்படி.காரணமான எண்ணங்களை அடையாளம் காண்பது அடுத்த நிலை.எண்ணங்களை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.
உயிரற்ற உறவுகள்
Reviewed by haru
on
July 07, 2014
Rating:
Reviewed by haru
on
July 07, 2014
Rating:





No comments