புலனாய்வு பத்திரிகைகளின் இன்னொரு பக்கம்.
பரபரப்புக்கு பெயர் போனவை புலனாய்வு பத்திரிகைகள்.தலைப்பு எப்போதும் வாங்க வைக்கிற மாதிரிதான் வைக்க வேண்டும்.தமிழில் அநேகமாக துக்ளக்தான் முன்னோடி என்று நினைக்கிறேன்.ஒரு கட்ட்த்தில் தராசு பரபரப்பாக இருந்த்து.நக்கீரன் கோபால் தராசு பத்திரிகையில் பணியாற்றியவர்.
புலனாய்வு பத்திரிகை நிருபர் என்றால் பேர்தான் பெத்த பேரு! அப்போது உள்ளுர் பத்திரிகை ஒன்றும்,தொழில் சார்ந்த இதழ் ஒன்றும் ஆக இரண்டு இதழ்களில் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு.தேர்தலுக்காக ஒரு வெளியீடு கொண்டு வர முடிவு செய்தோம்.மாவட்டம் முழுக்க அலைந்து சுற்றிய அனுபவம் உண்டு.
வேட்பாளர்களை பார்க்க வேண்டுமானால் இரவு பதினோரு மணி.இல்லாவிட்டால் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கும்.அங்கே போக வேண்டும்.காலையில் கிளம்பினால் வீடு வந்து சேர இரவு பன்னிரண்டு மணி ஆகும்.உடல் முழுக்க வலியில் படுக்கையில் விழுந்தால் காலையில் யாராவது எழுப்பினால்தான் உண்டு.
இரண்டு கட்சிகள் பிரிந்துவிட்ட்து என்பார்கள்.ஒரு கட்டுரை எழுதி முடித்தால் சேர்ந்து விட்டிருக்கும்.உடனுக்குடன் ஆறிப்போய்விடும்.இப்போது பெரும்பாலும் வாரம் இரண்டு என்று ஆகிவிட்ட்து.அச்சுக்கு போக வேண்டும்,உடனே கட்டுரை வேண்டும்.அதுவும் முன்பெல்லாம் அவசரமாக்க் கிளம்பி சென்னை செல்ல வேண்டும்.
வலம்புரிஜான் ஒரு புலனாய்வு பத்திரிகை ஆரம்பித்தார்.நான் ஒரு கட்டுரை அனுப்பினேன்.வெகு காலம் பார்த்துவிட்டு அரசாங்கம் செய்யாமல் கிராம மக்களே பல கிலோமீட்டருக்கு சாலை அமைத்த செய்தி அது.புகைப்படங்கள் இணைக்கவில்லை.”இரண்டு நாட்களுக்குள் புகைப்படம் வேண்டும்.நேரில் எடுத்து வாருங்கள் பணம் தந்துவிடுகிறேன்” என்று கடிதம் அனுப்பியிருந்தார்.
கடிதம் தபாலில் கிடைக்க தாமதமாகிவிட்ட்து.போட்டோ எடுக்கப் போகலாம் என்று கிளம்பியபோது இதழ் கடைகளில் விற்பனையில் இருந்த்து.நான் அனுப்பிய கட்டுரைக்கு படம் வரைந்து வெளியிட்டுவிட்டார்.கொஞ்சம் தாமதம் கூட கஷ்டம்.பேருந்துகளில் கொடுத்துவிட்டு போன் செய்து சொல்லவேண்டும்.இணையத்தில் செயல்படுகிற வசதி அப்போது இல்லை.
முக்கியமான ஆட்களை செய்தி சம்பந்தமாக பார்க்கப் போனால் வீட்டுக்குள் இருந்தாலும் ஆள் இல்லை என்று சொல்வார்கள்.அலைச்சல் மட்டும் மிச்சமிருக்கும்.மழை,வெயில் எல்லாம் பார்க்க முடியாது.நல்ல நாள் கெட்ட நாள் இல்லை.சம்பளமும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை.காட்டுக்கு போக வேண்டுமென்றாலும் போய்த்தான் ஆக வேண்டும்.
இன்னொரு விஷயம் தெரிந்த சங்கதிதான்.மிரட்டல்,வழக்கு,ஆட்டோ இதெல்லாம் சாதாரணம்.உச்சபட்சமாக கொலைகளையும் தமிழ் பத்திரிகை உலகம் சந்தித்த நிகழ்வுகள் உண்டு.தராசு அலுவலகத்தில் நடந்த கொலைகள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.சில நேரங்களில் ஒளிந்து வாழ்ந்தவர்கள் உண்டு.
புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! கிரிமினல்களை அடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கின்றன.ஊழல்வாதிகள்,கிரிமினல்கள் கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.
புலனாய்வு பத்திரிகைகளின் இன்னொரு பக்கம்.
Reviewed by haru
on
October 05, 2011
Rating:
No comments